அம்பாறை இறக்காமம் பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட மாணிக்கமடு கிராமத்தின் மாயக்கல்லிமலையில் பலவந்தமாக வைக்கப்பட்ட புத்தர் சிலையை அகற்றுவதற்கு பௌத்த பிக்குகள் மறுப்பு தெரிவித்துள்ள நிலையில், குறித்த பிரச்சனை தொடர்பில் ஆராய்ந்து சுமூகமானத் தீர்வை எட்டும் நோக்கில் அம்பாறை மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் தலைமையில் இன்று விசேட கூட்டமொன்றும் இடம்பெறவுள்ளது.
அம்பாறை மாவட்டத்தின் இறக்காமம் பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட மாணிக்கமடு கிராமத்தின் மாயக்கல்லிமலையில் கடந்த சனிக்கிழமை 30 ஆம் திகதி திடீரென அங்கு சென்ற பௌத்த பிக்குகள் குழுவொன்று புத்தர் சிலையொன்றை வைத்து, பௌத்த கொடிகளையும் பறக்கவிட்டனர்.
இதனையடுத்து அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் அங்கு இராணுவம் மற்றும் பொலிசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து பௌத்த பிக்குகள், இந்து ஆலய நிர்வாகசபை உறுப்பினர்கள் மற்றும் பள்ளிவாசல் நிர்வாகிகள் ஆகியோர் அழைக்கப்பட்டு அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் திணைக்களத்தில், அரசாங்க அதிபர் தலைமையில் விஷேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.
இந்த கலந்துரையாடலின்போது குறித்த இடத்தில் சிங்கள மக்கள் வசிக்கவில்லை என இந்து ஆலய நிர்வாகசபை மற்றும் முஸ்லிம் பள்ளிவாசல் நிர்வாகிகள் சுட்டிக்காட்டியதுடன் குறித்த புத்தர் சிலையை அகற்றவேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
எனினும் இறக்காமத்தில் அகழ்வாராய்ச்சிக்குரிய இடங்களாக 19 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவற்றை பாதுகாக்கவேண்டிய தேவை தமக்கு இருப்பதாகவும் தெரிவித்துள்ள பௌத்த பிக்குகள், புத்தர் சிலையை அகற்ற முடியாது என திட்டவட்டமாக அறிவித்துவிட்டனர்.
இந்த நிலையில், எதுவித தீர்மானங்களும் எட்டப்படாத நிலையில் குறித்த கலந்துரையாடல் நிறைவுபெற்றுள்ளது.
இந்த பிரச்சினை தொடர்பில் ஆராய பௌத்த, இந்து மற்றும் முஸ்லிம் மதத்தலைவர்கள், சிவில் பிரதிநிதிகளை உள்ளடக்கிய குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த குழுவுடனான சந்திப்பு விரைவில் நடைபெற்று பிரச்சினைக்கு தீர்வு எட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமையவே இன்றைய தினம் அரசாங்க அதிபர் தலைமையில் விசேட கூட்டம் இடம்பெறவுள்ளதாக மாவட்ட செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

