வடக்கிற்கு ‘பொருத்தமான’ ஆளுநர்!

440 0

புதிய ஜனா­தி­ப­தி­யாக கோத்­தா­பய ராஜபக்ஷ தெரிவு செய்­யப்­பட்டு நாளை­யுடன் ஒரு மாதம் நிறை­வ­டை­ய­வுள்­ளது. அவர் பத­விக்கு வந்­த­வுடன், அனைத்து மாகா­ணங்­களின் ஆளு­நர்­க­ளையும் பதவி வில­கு­மாறு கூறியிருந்தார்.

 

உட­ன­டி­யா­கவே ஆளு­நர்கள் அனை­வரும் பதவி விலகி விட்­டனர். அதையடுத்து, வடக்கு, கிழக்கு, வடத்திய மாகா­ணங்கள் தவிர ஏனைய மாகா­ணங்­க­ளுக்­கான ஆளு­நர்கள் நியமிக்­கப்­பட்­டனர்.

பின்னர் கிழக்கு, வட­மத்­திய மாகாணங்­க­ளுக்கும் ஆளு­நர்கள் நியமிக்கப்­பட்­டனர். இந்தப் பத்தி எழுதப்­படும் வரையில், வடக்கு மாகாண ஆளுநர் பதவி வெறி­தா­கவே இருக்­கி­றது. அந்தப் பத­விக்கு, ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷவினால் யாரும் நிய­மிக்­கப்­ப­ட­வில்லை.

வடக்கு மாகா­ணத்­துக்குப் பொருத்தமான ஆளுநர் ஒரு­வரைத் தெரிவு செய்­வதில், ஜனா­தி­பதி கோத்தாபய ராஜபக் ஷ நெருக்­க­டியை எதிர்­கொண்­டி­ருக்­கி­றாரா அல்­லது பொருத்­த­மான நபர் கிடைக்­க­வில்­லையா அல்­லது அந்த விட­யத்தில் அக்­க­றை­யற்­றி­ருக்­கி­றாரா என்ற பர­வ­லான விமர்­ச­னங்கள் எழுந்து கொண்டிருக்கின்றன.

வடக்கில் ஆளுநர் இல்­லா­ததால், வடக்கு மாகா­ணத்தின் பல நிர்­வாக செயற்­பா­டுகள் முடங்­கி­யுள்­ளன. வடக்கு மாகா­ண­ச­பையின் பத­விக்­காலம் முடிந்து விட்­டது, எனவே ஆளு­நரின் பொறுப்பில் தான் எல்­லாமே நடக்க வேண்டும்.

வருட இறு­திக்­காலம் என்­பதால், வட மாகா­ண­ச­பையின் கீழ் உள்ள திணைக்­க­ளங்கள், அமைச்­சுக்­களில் பணி­யாற்றும் பணி­யா­ளர்­களின் நிய­ம­னங்கள், இட­மாற்­றங்கள், ஓய்­வூ­தியம் என ஏகப்­பட்ட பணிகள் ஆளு­நரின் ஒப்­பு­த­லுக்­காக காத்­தி­ருக்க வேண்­டிய நிலை ஏற்­பட்­டி­ருக்­கி­றது.

குறிப்­பாக அரச பணி­யா­ளர்­களின் இட­மாற்­றங்கள் விட­யத்தில் தீர்க்­க­மான முடிவை எடுக்க வேண்­டிய பொறுப்பில் இருப்­பவர் ஆளுநர்.

வன்னிப் பகு­தியில் கஷ்டப் பிர­தே­சங்­களில் 6 ஆண்­டு­க­ளுக்கு மேல் பணி­யாற்­றிய பெரு­ம­ளவு ஆசி­ரி­யர்கள் இட­மாற்­றத்­துக்­காக ஆளுநர் செய­ல­கத்­துக்கு அலைந்து கொண்­டி­ருக்­கி­றார்கள். அவர்கள் போராட்டம் ஒன்றைக் கூட நடத்­தி­யி­ருக்­கி­றார்கள்.

வரும் ஜன­வரி 2 ஆம் திகதி பாட­சா­லைகள் திறக்­கப்­படும் போது, அவர்­களின் இட­மாற்­றங்கள் உறு­தி­யா­குமா அல்­லது தொடர்ந்தும் கஷ்டப் பிர­தே­சங்­க­ளி­லேயே இருக்க வேண்­டுமா என்ற கேள்­விக்கு இன்­னமும் பதில் இல்லை.

நிர்­வாக ரீதி­யான பல பிரச்­சி­னை­களைக் கவ­னத்தில் கொண்டு விரைவில் வடக்கு மாகா­ணத்­துக்கு புதிய ஆளு­நரை நிய­மிக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்­தனும் கோரி­யி­ருக்­கிறார்.

ஆனால் அர­சாங்கம் இந்த விட­யத்­தில் ஒன்றும் அவ­ச­ரப்­ப­டு­வ­தாகத் தெரி­ய­வில்லை. வடக்கின் ஆளு­ந­ராக நிய­மிக்­கப்­ப­ட­வுள்ளார் என்றும், அதற்­கான பரி­சீ­ல­னையில் பெயர் உள்­ள­வர்கள் என்றும் முத்­தையா முர­ளி­தரன்,  முன்னாள் தலைமை நீதி­ய­ரசர் சிறீ­பவன் என்று பல பேரின் பெயர்கள் அடி­பட்­டன.

இதோ நிய­மனம் இடம்­பெறப் போகி­றது, பத­வி­யேற்கப் போகிறார் புதிய ஆளுநர் என்­றெல்லாம் ஊட­கங்­களில் செய்­தி­களும் வெளி­யா­கின. ஆனாலும், புதிய ஜனா­தி­பதி பத­வி­யேற்று கிட்­டத்­தட்ட ஒரு மாத­மா­கியும் வடக்­கிற்­கான ஆளு­நரை நிய­மிக்க முடி­ய­வில்லை.

இந்­த­நி­லையில் தான் வடக்­கிற்கு ஒரு ஆளு­நரை நிய­மிக்க முடி­யாத ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷவா, தமிழ் மக்­களின் பிரச்­சி­னைக்கு தீர்வு காணப் போகிறார் என்று கூட்­ட­மைப்பின் பாராளு­மன்ற உறுப்­பி­னர்கள் சிலர் பகிரங்­க­மா­கவே கேள்வி எழுப்பத் தொடங்கி விட்­டனர்.

தமிழ் மக்­களின் பிரச்­சி­னைகள் பற்­றியோ, அதற்­கான தீர்வு பற்­றியோ இது­வரை வெளிப்­ப­டை­யாகப் பேசாத ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷவிடம் இருந்து தீர்வு ஒன்று கிடைக்கும் என்று தமிழ் மக்கள் யாரும் எதிர்­பார்க்­க­வில்லை என்­பதே உண்மை.

அவர் காணி, பொலிஸ் அதி­கா­ரங்­களைக் கூட வழங்க முடி­யாது என்ற நிலைப்­பாட்டில் இருப்­பவர். அதனை அவர் பகி­ரங்­க­மா­கவே கூறி­விட்டார்.

ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷ ஒரு விட­யத்தை மறுத்து விட்டால், அந்த முடிவை மீளாய்வு செய்­யு­மாறு அவ­ரிடம் கோரு­வது வீணா­னது.  அந்­த­ள­வுக்கு அவர் பிடிச்­சி­ரா­வித்­தனம் கொண்­டவர்.

எனவே, 13 ஆவது திருத்­தச்­சட்­டத்தின் முழு­மை­யான அமு­லாக்­கத்தைக் கூட மறுத்து வரும் கோத்­தா­பய ராஜபக் ஷ தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு வழங்­குவார் என்று எவரும் எதிர்­பார்க்க முடி­யாது. ஆனால் அவர் அபி­வி­ருத்தி, வேலை­வாய்ப்பு போன்ற விட­யங்­களில் கவனம் செலுத்­துவார். தமிழ் மக்­களின் பிரச்­சி­னைக்கு அது தான் தீர்வு என்றும் கூறி­யி­ருக்­கிறார்.

அவர் கூறு­கின்ற அபி­வி­ருத்தி தீர்வை எட்­டு­வ­தற்குக் கூட, வடக்கில் சரி­யானதொரு நிர்­வாகக் கட்­ட­மைப்பு உரு­வாக்­கப்­பட வேண்டும். ஆனால் ஒரு மாத­மா­கியும் வடக்­கிற்கு பொருத்­த­மான ஒரு ஆளு­நரைத் தெரிவு செய்ய முடி­யாத நிலையில் ஜனா­தி­பதி கோத்­தா­பய

ராஜபக் ஷ இருந்து கொண்­டி­ருக்­கிறார். இந்த விட­யத்தில் அவர் பொறுமை காக்­கி­றாரா அல்­லது பொறுப்­பீ­ன­மாக இருக்கிறாரா என்ற கேள்­விகள் எழுகின்றன.

வடக்­கிற்கு இரா­ணுவப் பின்­னணி கொண்ட ஆளு­நர்கள் நிய­மிக்­கப்­படக் கூடாது என்றும், தமிழர் ஒருவர் ஆளு­ந­ராக நிய­மிக்­கப்­பட வேண்டும் என்றும் பர­வ­லான கோரிக்­கைகள் விடுக்­கப்­பட்டு வந்த போதும், மஹிந்த

ராஜபக் ஷ அர­சாங்கம் அதனை ஒரு­போதும் ஏற்றுக் கொள்­ள­வில்லை.

மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் கூட தனது பத­விக்­கா­லத்தின்  முடிவில் தான், வடக்­கிற்கு ஒரு தமிழ் ஆளு­நரை நிய­மித்­தி­ருந்தார். வடக்­கிற்கு தமிழர் ஒரு­வரோ, கிழக்­கிற்கு முஸ்லிம் ஒரு­வரோ ஆளு­ந­ராக நிய­மிக்­கப்­ப­ட­மாட்­டார்கள் என்ற நீண்ட கருத்­தி­யலை உடைத்­தவர் மைத்­தி­ரி­பால சிறி­சேன தான். வடக்­கிற்கு தமிழ் ஆளுநர் ஒரு­வரை நிய­மிப்­பதால் எந்தச் சிக்­கலும் ஏற்­ப­டாது என்­பதை, ஆளு­ந­ராக இருந்த கலா­நிதி சுரேன் ராகவன் நிரூபித்திருக்­கிறார்.

இந்­த­நி­லையில் பல்­வேறு தரப்­பு­களின் கோரிக்­கைகள் அழுத்­தங்­களைக் கருத்தில் கொண்டு வடக்கு ஆளுநராக தமிழர் ஒரு­வரை நிய­மிக்­கவே ஜனாதிபதி கோத்­தா­பய ராஜபக் ஷ முயற்­சி­களை முன்­னெ­டுத்து வரு­வ­தாக தக­வல்கள் வெளி­யா­கின. ஆனாலும், எல்லாம் வெறும் ஊகங்­க­ளாக இருந்­த­ன­வே­யன்றி, உண்­மை­யாக இருக்­க­வில்லை.  வடக்கின் ஆளு­ந­ராக நிய­மிக்­கப்­ப­டு­வ­தற்கு பொருத்­த­மான தமிழர் ஒருவர் இன்­னமும் கிடைக்­க­வில்லை  போல என்று அமைச்சர் டக்ளஸ் தேவா­னந்­தாவே கூறி­யி­ருக்­கிறார். பொருத்­த­மான தமிழர் என்­பதன் அர்த்தம் ஆளுநர் பத­விக்கா அல்­லது, அர­சாங்­கத்­துடன் ஒத்­து­ழைக்கக் கூடி­யவர் என்ற அர்த்­தத்­திலா என்ற மயக்கம் உள்­ளது. ஆனாலும், இந்த விட­யத்தில் பதவிக்குப் பொருத்­த­மான ஒரு­வரை தேடு­வதை விட, தம்­முடன் ஒத்­துழைக்கக் கூடிய ஒரு­வரைத் தேடு­வதில் தான் அர­சாங்கம் கவனம் செலுத்தும் என்­பதில் சந்­தேகம் இல்லை.

ஏனென்றால், ஏற்­க­னவே இந்தப் பத­விக்குப் பரி­சீ­லிக்­கப்­பட்ட முத்­தையா முர­ளி­தரன் போன்ற பலர், நிர்­வாகத் திற­மையை நிரூ­பித்­த­வர்கள் அல்ல. அவர்­களின் துறை­களும், அனு­ப­வங்­களும், நிர்­வாகம் சாராத  வேறு­பட்­ட­வை­யா­கவே இருந்­தன.

எனவே, புதிய ஆளுநர் தெரிவில் நிர்­வாகத் திறமை கருத்தில் கொள்­ளப்­படும் என்று கரு­தப்­ப­டு­வ­தற்­கில்லை.

ஆனால், தற்­போ­தைய நிலையில், வடக்கின் ஆளுநர் நிய­மன விட­யத்தில் நிர்­வாகத் திறமை என்­பது முக்­கி­ய­மாக கவ­னத்தில் கொள்­ளப்­பட வேண்­டி­ய­தாகும்.

ஏனென்றால், மாகா­ண­சபைத் தேர்தல் நடத்­தப்­படும் வரையில், ஆளு­நரே மாகாண நிர்­வாக இயந்­தி­ரத்தை செயற்­ப­டுத்தப் போகிறார். அவ்­வா­றான பொறுப்பைக் கொண்­டுள்ள ஒருவர் விளை­யாட்டுப் பிள்­ளைா­யாக இருந்து விட்டுப் போக முடி­யாது.

அதுவும், அபி­வி­ருத்­தியின் மூலம், வடக்­கி­லுள்ள மக்­களின் பிரச்­சி­னை­களைத் தீர்க்­க­வுள்­ள­தாக உறு­தி­ய­ளித்­துள்ள ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷவின் இலக்கை எட்­டு­வ­தற்கு, நிர்­வாக ஆளுமை கொண்ட ஆளுநர் ஒருவர் முக்­கியம்.

அத்­த­கைய ஒரு தமி­ழரை அவரால் இன்­னமும் கண்­டு­பி­டிக்க முடி­ய­வில்லை என்­பது ஆச்­ச­ரியம் தான்.

அவ்­வாறு ஒரு­வரைக் கண்­டு­பி­டிக்க முடி­ய­வில்லை என்று நியாயம் கூறப்­பட்­டாலும் ஆச்­ச­ரி­ய­மில்லை. ஏனென்றால், தமிழர் அல்­லாத ஒருவரை, சிங்களவர் ஒருவரை ஆளுநராக நியமிப்பதற்கும் அந்த நியாயம் உதவக் கூடும் அல்லவா?

எவ்வாறாயினும், வடக்கு ஆளுநர் நியமன விடயத்தில், ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ தனக்கு நெருக்கமாக செயற்படக் கூடிய ஒருவரைத் தான் தேடுவதாக கூறப்படுகிறது.

இந்த விடயத்தில், பிரதமர் மஹிந்த ராஜபக் ஷவின் பேச்சுக் கூட எடுபட வாய்ப்பில்லை என்றும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

ஜனாதிபதித் தேர்தலில் கோத்தாபய ராஜபக் ஷவை வடக்கில் உள்ள மக்கள் முழுமையாகவே நிராகரித்திருந்தார்கள். அதனை அவர் பதவியேற்பு உரையிலும் சுட்டிக்காட்டியிருந்தார்.

ஆனாலும், தான் அனைத்து இலங்கையருக்குமான ஜனாதிபதி என்று குறிப்பிட்டிருந்தார்.

அவ்வாறாயின், அனைத்துலக மாகாணங்களுக்கும் ஆளுநர்களை நியமித்தது போல, வடக்கிற்கும் விரைவாக ஒரு ஆளுநரை நியமிப்பது தானே பொருத்தமானது.

– கபில்