திருக்காட்டுப்பள்ளி அருகே அறுவடைக்கு தயார்நிலையில் மஞ்சள் கொத்துக்கள் உள்ளன. நல்ல விளைச்சல் இருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
தமிழர்களின் முக்கிய பண்டிகைகளுள் பொங்கல் பண்டிகையும் ஒன்றாகும். இந்த பண்டிகையில் முக்கிய இடத்தை பிடிப்பது கரும்பு மற்றும் மஞ்சள் ஆகும். பொங்கல் பண்டிகையன்று புதுப்பானையில் மஞ்சள் மற்றும் இஞ்சி கொத்துக்கள் கட்டி அலங்காரம் செய்து, புதிய அரிசியால் பொங்கல் வைத்து சூரியனை வழிபடுவது வழக்கம். பொங்கல் பண்டிகைக்கு முன்னதாக கரும்பு மற்றும் மஞ்சள் சாகுபடியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபடுவார்கள். காவிரி பாயும் தஞ்சை மாவட்டமான திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள நடுப்படுகை, படுகை, வளப்பக்குடி, நேமம் ஆகிய பகுதிகளில் பரவலாக மஞ்சள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

