வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரைத் தேடி ஆயிரம் நாட்கள் தாண்டியும் போராடும் தமிழர்களுக்கு மனித உரிமைகள் தினம் எப்போது – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை!

354 0

 

 

 

டிசம்பர் 09. 2019
நோர்வே.

சர்வதேச மனித உரிமைகள் நாள் ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் 10-ம் திகதி பெயரளவில் உலகளாவிய ரீதியில் கடைப்பிடிக்கப்படுகிறது. இரண்டாம் உலகப் போரின் பின்னர் 1948-ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையினால் கொண்டுவரப்பட்ட மனித உரிமைகள் பிரகடனத்துக்கு 48 நாடுகள் அங்கீகாரம் வழங்கியிருந்தன. இதனையடுத்து 1950-ம் ஆண்டிலிருந்து மனித உரிமைகள் நாள் உலகெங்கும் அனுட்டிக்கப்பட்டு வருகின்றது. இதே 1948-ம் ஆண்டுதான் இலங்கையும் வெள்ளையர்களிடம் இருந்து சுதந்திரம் அடைந்தது. இந்நாளே தமிழர்களுக்கான மனித உரிமை மீறலின் குறியீட்டு நாள்.

21ம் நூற்றாண்டின் மிகமோசமான இனவழிப்பு நடந்தேறிய இலங்கைத் தீவில் பூர்வீகக் குடிகளான தமிழர்களின் உரிமைகள் இன்றுவரை மீறப்பட்டே காணப்படுகின்றது. சிங்கள இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட தமது சொந்த நிலங்களுக்காகவும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமது சொந்தங்களுக்காகவும் தெருக்களிலும் அரச அலுவலகங்கள் முன்பாகவும் போராடும் சொந்தங்களுக்கு இன்று வரை நீதி மறுக்கப்பட்டே வருகின்றது. சிங்களத்தினதும் உலக வல்லரசுகளினதும் பூகோள அரசியல் நலன்களுக்குள் மனித உரிமை சிக்குண்டு தவிக்கின்றது.

மனிதகுலம் சமாதானத்துடனும், நிம்மதியுடனும் வாழவேண்டும் என்ற மேலோங்கிய சிந்தனையுடன் ஐநா சபையால் உருவாக்கப்பட்ட மனித உரிமைச் சாற்றுரைகள் ஐநா மனித உரிமை ஆணையத்தின் உறுப்பு நாடுகளும் மதித்து நடப்பதாகத் தெரியவில்லை. இப்பூமிப் பந்தை 360 பாகையில் சுற்றிப்பார்த்தால் உலகநாடுகளில் ஒருசில நாடுகளில் மட்டுமே மனித உரிமை பேணப்பட்டு வருகின்றது. சிறிலங்காவைப் போன்ற பல நாடுகளில் மனித உரிமைகள் மிகமோசமாக மீறப்பட்டும் மறுதலிக்கப்பட்டும் வருவதை மறுப்பதற்கில்லை.

இனப்படுகொலையை நடத்தி பல்லாயிரக்கணக்கான தமிழர்களைக் கொன்று குவித்த ஒரு பௌத்த பேரினவாதி இலங்கையின் தலையாரியாகப் பேரினவாதச் சிங்களத்தால் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். 2009ல் இனவழிப்பு நடைபெற்றபோது படைப்பிரிவுகளின் தளபதிகளாக இருந்தவர்கள் முறையே இராணுவத் தலைமை அதிகாரியாகவும் பாதுகாப்பு அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இலங்கையில் மனிதநேயம் மரணித்துவிட்டது என்பதற்கு உதாரணமாக இந்த விடயங்களே பறைசாற்றி நிற்கிறது. தமிழர்களைத் தொடர்ந்தும் இராணுவத்தின் அடக்குமுறைக்குள்ளும் பயப்பீதிக்குள்ளும் வைத்திருக்கவே சிங்களம் விரும்புகின்றது.
சனநாயக நாடு என்று பெயரளவில் சொல்லிக் கொள்ளும் சிறிலங்காவில் தொடர்ச்சியாக மனித உரிமைகள் மீறப்பட்டே வருகின்றன என்பதை அங்கு நடைபெற்றுக்கொண்டு இருக்கும் ஒடுக்குமுறைகள் மூலம் உணரமுடிகின்றது. புதிய சனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட கோத்தபாய ராஜபக்சவின் அனுராதபுர அங்குராற்பணம் தமிழர்களுக்கு ஒரு அச்சுறுத்தலான செய்தியைச் சொல்லி நிற்கிறது. பொருளாதார வளர்ச்சி என்ற போர்வையில் தமிழ்த் தேசியத்தைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கும் வியூகத்தைச் சிங்களமும் சர்வதேசமும் முனைப்புடன் நகர்த்தி வருகின்றது.

சர்வதேச மனித உரிமைகள் சாற்றுரை 30 உறுப்புரைகளைக் கொண்டது. ஓவ்வொரு உறுப்புரையிலும் மனிதகுலத்திற்கான அடிப்படை உரிமைகள் வரையப்பட்டுள்ளது. அன்றிலிருந்து இன்று வரை அதாவது இலங்கை சுதந்திரம் அடைந்த நாளிலிருந்து (04.02.1948) சிங்கள தேசமானது எந்தவொரு உறுப்புரைகளையும் மதித்து நடந்ததில்லை. பௌத்த மேலாதிக்கச் சித்தாந்தத்தின் மயக்கத்திலும் பௌத்த தேரர்களின் காலடியிலுமே சிறிலங்கா அரசின் மனித உரிமை பண்புகள் மிதிபட்டு சிதறிப்போயின.

மனித உரிமைச் சாற்றுரையில் கூறப்பட்டிருக்கும் ஒவ்வொரு பகுதியையும் உற்றுநோக்கினால் இன்று சிறிலங்காவில் நடைபெறுகின்ற ஒவ்வொரு விடயமும் மனிதகுலத்திற்கு ஒவ்வாதவையாகவே இருக்கின்றன. தமிழர்கள் தேசத்தை தாங்கும் தூண்களாக இருக்கின்ற நிலம், மொழி, பொருளாதாரம், கலாச்சாரம், மக்கள் கூட்டம் என்பன சிறிலங்கா அரசால் தொடர்ந்தும் திட்டமிட்டு அழிக்கப்பட்டுக்கொண்டே இருக்கின்றது.

முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற இனவழிப்பு, பாலியல் பலாத்காரம், மனித உரிமை மீறல்கள் என்பனவற்றுக்கு நீதி கிடைக்கும் வரை உலகத் தமிழர்கள் தொடர்ச்சியாகப் போராடிக் கொண்டே இருக்கவேண்டும். ஒரு கொடிய இராணுவ அடக்குமுறைக்குக்கீழ் ஆளப்பட்டு வரும் தமிழினம் தனது விடுதலைக்காக கிளர்ந்தெளுந்து போராடுவதற்கான உரிமையும் உண்டு என்பதை மனதில்கொள்ள வேண்டும்.

தமிழ்மக்களின் மனித உரிமை பாதுகாக்கப்பட வேண்டுமாயின் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு என்பது முன்வைக்கப்படவேண்டும். இவ் அரசியல் தீர்வானது இன அழிப்பிலிருந்து தமிழ் மக்களை பாதுகாப்பதாக அமைய வேண்டும். இதற்கு கோட்பாட்டு ரீதியாக தமிழ் மக்கள் ஒரு தேசம் என்பதையும், அந்த தேசத்திற்குரிய ஆட்சி செய்யும் அதிகாரமான இறைமையையும், தமிழ் மக்களுக்குரிய சுய நிர்ணய உரிமையையும் அங்கீகரித்தல் வேண்டும். அதுமட்டுமல்ல சுயநிர்ணய உரிமையை செயற்படுத்துவதற்கான ஆட்சிப்பொறிமுறையை உருவாக்க வேண்டும். அரசியல் யாப்பு சட்டரீதியாக வட-கிழக்கு இணைந்த தாயகம், சுயநிர்ணயமுடைய சுயாட்சி அதிகாரங்கள், என்பன உருவாக்குவதோடு வழங்கப்பட்ட அதிகாரங்களுக்கான பாதுகாப்பும் சர்வதேசத்தால் உறுதிப்படுத்தல் வேண்டும்.

2009-ம் ஆண்டிற்குப் பின் நாம் இழந்துவிட்ட அதிகாரமையத்தை மீள ஊருவாக்கி தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை அடைவதற்கான திட்மிடல்களைக் காலதாமதமின்றி முனைப்புடன் செயற்படுத்த வேண்டும். 1833-ல் ஆங்கிலேயர்களால் பறிக்கப்பட்ட எமது தேசத்தையும் எமது சுயநிர்ணய உரிமையையும் நாம் மீளப்பெற அனைத்து தமிழர்களும் ஓர் அணியில் திரண்டு செயற்படவேண்டும் என அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை உரிமையுடன் வேண்டி நிற்கின்றது.

‘தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”

‘அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை”