விக்னேஸ்வரன் தலைமையில் மாற்று அணியை உருவாக்கும் பேச்சுக்கள் தீவிரம்

511 0

வட மாகாண சபை முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் மாற்று அணி ஒன்றை ஏற்படுத்துவதற்கான கலந்துரையாடல்கள் தீவிரம் அடைந்துள்ளன.

பலமான மாற்று அணி ஒன்றினை அமைப்பது தொடர்பில் வடக்கு கிழக்கு மாவட்டங்களை சேர்ந்த புத்திஜீவிகளும் சிவில் சமூக பிரமுகர்களும் கட்சி தலைவர்களும் கடந்த சனிக்கிழமை முதல் விக்னேஸ்வரனுடன் சந்திப்புக்களில் ஈடுபட்டுள்ளனர்.

நல்லூரில் உள்ள விக்னேஸ்வரனின் இல்லத்தில் இன்று செய்வாய்க்கிழமையும் மன்னார் , முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணம் ஆகியவற்றை சேர்ந்த பொது அமைப்புக்களின் பிரமுகர்கள் விரிவான கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டனர்.

ஒரே கொள்கையின் கீழ் பயணிக்கக்கூடிய தமிழ் கட்சிகளையும் அதேவேளை அரசியல் கட்சிகள் சாராத பிரமுகர்களையும் விக்னேஸ்வரன் தலைமையிலான மாற்று அணிக்குள் உள்வாங்கி தேர்தலை சந்திப்பது தொடர்பிலும் கட்சிகளுக்கு இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை தொடர்பிலும் இந்த சந்திப்புக்க்களில் கலந்துரையாடப்பட்டுள்ளன.  கூட்டணியின் கொள்கை, சின்னம் , ஒழுக்கவிதிகள், ஆசன பங்கீடு ஆகியவற்றை உள்ளடக்கிய விரிவான புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றை தயாரிப்பதற்கு பலர் முன்வந்திருப்பதுடன் அதற்கான பணியிலும் அவர்கள் ஈடுபட்டிருப்பதாக நம்பகமாக அறியவருகின்றது.