பொதுத் தேர்வு நடந்தாலும் தேர்ச்சி நிச்சயம்: அமைச்சர் செங்கோட்டையன்

289 0

5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்கள் பொதுத் தேர்வு நடந்தாலும் 3 ஆண்டுகளுக்கு அவர்கள் அனைவரும் தேர்ச்சி செய்யப்படுவர் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் கோபி அருகே தூக்கநாயக்கன் பாளையத்தில் 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சாலை மேம்பாடு, குடிநீர் மேல்நிலைத் தொட்டிகள் கட்டுமானம் ஆகிய பணிகளுக்கு பூமி பூஜை இன்று நடைபெற்றது. ரூ.11 கோடி மதிப்பீட்டில் நடைபெற உள்ள பூஜையில் அமைச்சர் செங்கோட்டையன் கலந்துகொண்டார்.

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”அரசுப்பள்ளி மாணவர்கள் விளையாட்டு, இயல், இசை, நாடகம், ஓவியம் ஆகிய திறமைகளை வளர்த்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.

யோகா, சாலைவிதிகள் ஆகியவற்றுக்காகவும் ஒருநாள் பயிற்சி வழங்கப்படும். அரசுப் பள்ளிகளில் படிக்கும் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆங்கில மொழிப் பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. வாரம் ஒருமுறை 90 நிமிடங்கள் இதற்கான பயிற்சி வழங்கப்படும்.

5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்கள் பொதுத் தேர்வு குறித்து அச்சம்கொள்ளத் தேவையில்லை. 3 ஆண்டுகளுக்கு அவர்கள் அனைவரும் தேர்ச்சி செய்யப்படுவர்” என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.