உள்ளே தமிழரசு சஜித்துக்கு பிரசாரம்: வெளியே காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள் போராட்டம்! – அதிர்ந்தது கிட்டுப் பூங்கா (Video, Photos)

272 0

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவை ஆதரித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் இறுதிக் கட்டப் பிரசாரக் கூட்டம் நேற்று புதன்கிழமை (13.11.2019) மாலை யாழ்ப்பாணம் நல்லூர் கிட்டுப் பூங்காவில் இடம்பெற்றது.
இக்கூட்டத்தில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உட்பட பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள், முக்கியஸ்தர்கள், ஆதரவாளர்கள் எனப்பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

 

 

கூட்டமைப்பின் சஜித் ஆதரவு நிலைப்பாட்டுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், தமிழ் பொது வேட்பாளரை ஆதரிக்காமையைக் கண்டித்தும் வவுனியாவில் இருந்து வந்திருந்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தினர்.

காணாமல் ஆக்கப்பட்டோரின் போராட்ட கோசங்களால் நல்லூர் கிட்டுப் பூங்கா சூழலே அதிர்ந்தது.

இனத்தை விற்று அரசியல் செய்யாதே, சிங்கள வேட்பாளர்களுக்கு வாக்கு கேட்காதே, போர்க் குற்றவாளிகளைப் பாதுகாக்காதே, யு.என்.பியிடம் 300 கோடி ரூபாய் இலஞ்சப் பணம் வாங்கி வாக்களிக்கச் சொல்லாதே, பௌத்தத்துக்கு முன்னுரிமை வழங்க இணக்கம் வெளியிட்டவர்களே வெளியேறு, தமிழ் ஜனாதிபதி வேட்பாளர் சிவாஜிலிங்கத்துக்கு வாக்களிப்போம் என பல்வேறு கோசங்களை எழுப்பியும், சுலோக அட்டைகளை கைகளில் ஏந்தியவாறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காணாமல் ஆக்கப்பட்ட தனது பிள்ளையைத் தேடி எல்லா இடங்களும் அலையும் தாயொருவர் கருத்து தெரிவிக்கையில், தங்களது பிள்ளைகள் காணாமல் ஆக்கப்பட்டு பத்தாண்டுகளுக்கு மேலாகிறது. பிள்ளைகளை உடன் விடுவிக்கக் கோரிய எமது போராட்டம் ஆயிரம் நாட்களை தொட்டுள்ளது.
சிங்கள அரசுக்கு நிபந்தனையின்றி முட்டுக் கொடுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்றுவரை எங்களை சந்திக்கவில்லை. அரசிடமும் எம் பிரச்சினைகளை எடுத்துக் கூறவில்லை. மாறி மாறி சிங்கள அரசாங்கங்களுக்கு ஆதரவளித்து என்னத்தைக் கண்டோம். ஆகவே, இம்முறை தமிழ் வேட்பாளருக்கே எங்களது முழுமையான ஆதரவை வழங்குவோம்.

கூட்டமைப்பை கடுமையாக சாடிய காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் ஆற்றாமையால் கதறி அழுதமையையும் அவதானிக்க முடிந்தது.
தமிழ் மக்களுக்கு ஏன் ஒரு தமிழ் பொதுவேட்பாளர் தேவைப்படுகின்றார்? என்பதன் அவசியத்தையும், அதன் விளைவையும் வலியுறுத்தும் துண்டுப்பிரசுரங்களையும் மக்களுக்கு வழங்கினார்கள்.

தமது போராட்டத்தை முடித்துக் கொண்டு தாங்கள் வந்திருந்த வாகனத்தை நோக்கி சென்ற போது பத்துக்கும் மேற்பட்ட பொலிஸார் அவர்களை சுற்றி வளைத்தனர். ஒரு நிமிடம் கூட தாமதிக்காமல் உடனடியாக வெளியேறுமாறு கலைத்தனர். இதனை செய்தியாக்க சென்ற ஊடகவியலாளரையும் மிரட்டினர்.
தமிழரசுக் கட்சியினரின் ஏவுதலில் தான் பொலிஸார் இவ்வாறு செயற்பட்டதாக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் விசனம் தெரிவித்தனர்.