தஞ்சை பெருவுடையாருக்கு 1000 கிலோ அரிசியில் அன்னாபிஷேக

283 0

ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி தஞ்சை பெரியகோவிலில் உள்ள பெருவுடையாருக்கு  இன்று(12-ந்தேதி) அன்னாபிஷேகம் நடைபெற உள்ளது.

மாமன்னன் ராஜராஜ சோழனால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட தஞ்சை பெரியகோவில் உலக பிரசித்தி பெற்றது ஆகும். இந்த கோவிலுக்கு தமிழகத்தை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் தினமும் வந்து செல்கின்றனர்.

ஆண்டுதோறும் ஐப்பசி மாத பவுர்ணமி நாளன்று சிவன் கோவில்களில் அன்னாபிஷேகம் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி தஞ்சை பெரியகோவிலில் உள்ள பெருவுடையாருக்கு நாளை(12-ந்தேதி) அன்னாபிஷேகம் நடைபெற உள்ளது.

இந்த நிகழ்ச்சிக்காக பக்தர்களால் 1,000 கிலோ அரிசியும், 1000 கிலோ காய், கனிகளும் வழங்கப்பட உள்ளன. பக்தர்கள் வழங்கிய பச்சரிசி சாதம் தயார் செய்து மாலையில் பெருவுடையாருக்கு அன்னாபிஷேகம் நடைபெற உள்ளது.பின்னர் பலவகை காய்கறிகளால் அலங்காரம் செய்யப்பட்டு ஆராதனை நடைபெறுகிறது. பெருவுடையாருக்கு சாத்தப்பட்ட அன்னம் பொதுமக்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும், நீர்நிலைகளில் அவை கரைக்கப்பட்டு ஜீவராசிகளுக்கு அளிக்கப்படும். திருமணமாகி குழந்தைப்பேறு இல்லாமல் உள்ள பெண்கள் இந்த அன்னத்தை உட்கொண்டால் குழந்தைப் பேறு ஏற்படும் என்பது ஐதீகம். இதனால் இந்த அன்னாபிஷேக விழாவில் ஏராளமான பெண்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்வார்கள்.

இதேபோல் தஞ்சையில் உள்ள கொங்கணேசுவரர் கோவில், காசி விசுவநாதர்கோவில், வெண்ணாற்றங்கரை தஞ்சபுரீஸ்வரர் கோவில் உள்ளிட்ட சிவன் கோவில்களில் நாளை அன்னாபிஷேகம் நடைபெற உள்ளது.

தஞ்சையை அடுத்த திருச்சோற்றுத்துறையில் சப்தஸ்தான ஸ்தலங்களில் ஒன்றாக விளங்கும் ஓதனவனேஸ்வரர் கோவில் உள்ளது. அப்பர், சுந்தரர், ஞான சம்பந்தர் பாடல் பெற்ற இக்கோவில் காவிரிக் கரையில் அமைந்துள்ளது. இங்கு அம்மன் அன்ன பூரணியாக அருள் பாலிக்கிறார். இக்கோவில் இறைவன் ஓதனவனேஸ்வரர் தனது பக்தன் அருளாளன் வேண்டுகோளை ஏற்று மக்கள் பசிப்பிணி போக்க அட்சய பாத்திரத்தை வழங்கி திருவிளையாடல் புரிந்தார்.

அன்னதானத்துக்கு சிறப்பு பெற்ற இக்கோவிலில் ஆண்டு தோறும் அன்னாபிஷேக விழா மிகவும் சிறப்பாக நடைபெறும்.

இங்கு இந்த ஆண்டுக்கான அன்னாபிஷேக விழா நாளை (12-ந்தேதி) நடக்கிறது. விழாவையொட்டி காலை 11 மணிக்க சுவாமிக்க அன்னாபிஷேகம் நடக்கிறது. இதைத்தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழக்கப்படுகிறது. பின்னர் மாலை 5 மணிக்கு சுவாமிக்கு அன்ன அலங்காரம் செய்து சிறப்பு வழிபாடும், 5.30 மணிக்கு மகா அபிஷேகமும் நடைபெறுகிறது.