மசூதியையும் ராமர் கோயிலையும் மத்திய அரசே கட்டித் தர வேண்டும்: தங்கபாலு

51 0

மசூதியையும் ராமர் கோயிலையும் மத்திய அரசே கட்டித் தந்து இரு சமூக மக்களையும் திருப்திப்படுத்த வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு கூறியுள்ளார்.

சேலத்தில் முதல்வர் பழனிசாமியை இன்று கே.வி.தங்கபாலு சந்தித்தார். முதல்வரின் மாமனார் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக அவரை நேரில் சந்தித்ததாக தங்கபாலு கூறினார்.

அப்போது அயோத்தி தீர்ப்பு குறித்து தங்கபாலுவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ”அயோத்தி தீர்ப்பு எல்லா மக்களும் வரவேற்க வேண்டிய ஒன்று. இந்தியாவில் அமைதி நிலவ வேண்டும். எல்லா சமூக மக்களும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். இத்தீர்ப்பை காங்கிரஸ் கட்சி வரவேற்கிறது. நல்லிணக்கம் காக்கப்பட வேண்டும். மத்திய அரசு, மசூதியையும் ராமர் கோயிலையும் கட்டித் தந்து இரு சமூக மக்களையும் திருப்திப்படுத்த வேண்டும்” என்று தங்கபாலு கூறினார்.

அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயில் கட்ட அனுமதி வழங்கப்படுகிறது. அதே நேரம் மசூதி கட்ட, சன்னி வக்பு வாரியத்துக்கு 5 ஏக்கர் மாற்று இடம் வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. அரசியல் சாசன அமர்வின் 5 நீதிபதிகளும் ஒருமித்த கருத்துடன் வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தத் தீர்ப்பினை வழங்கியது குறிப்பிடத்தக்கது.