சென்னை விமான நிலையத்தில் 26.5 கிலோ குங்குமப்பூ, 1.82 கிலோ தங்கம் பறிமுதல்; 3 பேர் கைது

218 0

சென்னை விமான நிலையத்தில் ரூ.63.60 லட்சம் மதிப்புள்ள குங்குமப்பூ, 1.82 கிலோ தங்கம் கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை அண்ணா சர்வதேச விமான நிலைய சுங்கத்துறையின் விமான புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த ரகசியத் தகவலின் பேரில், துபாயிலிருந்து, எமிரேட்ஸ் விமானத்தில் இன்று சென்னை வந்த ஏகாருல் பகுதியைச் சேர்ந்த அமீர் தெக்குள்ளா காண்டி (41), கோழிக்கோட்டைச் சேர்ந்த ஆரூண் நாஹர் மொயாத் (29) ஆகியோரை விமான நிலையத்தின் வெளியேறும் பகுதியில் வழிமறித்து சோதனை செய்யப்பட்டது.

அப்போ அமீர், ஆருண் ஆகிய இருவரின் இடுப்புப் பகுதியில், ரப்பரால் சுற்றப்பட்டு தங்கம் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடமிருந்த 1.82 கிலோ எடையுள்ள 71.5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கம் கைப்பற்றப்பட்டது. இதனையடுத்து அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

முன்னதாக, புதன்கிழமை அன்று, துபாயிலிருந்து மஸ்கட் வழியாக ஓமன் ஏர் விமானத்தில் வந்த நாகப்பட்டினத்தைச் சேர்ந்த முகமது ஜாவித் முஷார் (22), விமான நிலைய வருகைப்பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றித் திரிந்தார். தமது உடமைகளைப் பெற்றுக் கொண்ட அவர், அவசர அவசரமாக வெளியேற முயன்றார்.

இதையடுத்து விமான நிலைய வெளியேறும் பகுதியில் அவரை சுங்கத்துறையினர் வழிமறித்து, அவரது பையை சோதனை செய்தனர். அதில் ஈரான் நாட்டு குங்குமப்பூ இருந்தது கண்டறியப்பட்டது. மொத்தம் 26.5 கிலோ எடையுள்ள 63.60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள குங்குமப்பூ, தலா 25 கிராம் எடையுள்ள பைகளில் இருந்தது. இவற்றைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், அதனைக் கடத்தி வந்த நபரையும் கைது செய்து, மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்.