பிரம்மாண்ட சுவரோவியத்தில் கிரெட்டாவுக்கு கவுரவம்

322 0

சான் பிரான்சிஸ்கோவின் பிரதான சாலை ஒன்றில் சூழலியல் செயற்பாட்டாளர் கிரெட்டா துன்பெர்க்கின் பிரம்மாண்ட ஓவியம் தீட்டப்பட்டு வருவதை பாதசாரிகள் வியந்து பார்த்து வருகின்றனர்.

பதினைந்து வயதே ஆன கிரெட்டா துன்பெர்க் என்ற அந்தச் சிறுமி, மனிதர்களுடைய வாழ்க்கை முறையால் தூண்டப்பட்ட பருவநிலை மாற்றத்திலிருந்து புவியைக் காக்க வேண்டுமென்பதை நோக்கமாகக் கொண்டு தனியாளாகப் போராடத் தொடங்கியவர். ஸ்வீடனைச் சேர்ந்த இந்த இளம் மாணவிக்கு நோபல் பரிசு வழங்கவும் பரிந்துரை செய்யப்பட்டது.

அர்ஜெண்டினாவைச் சேர்ந்த சுவரோவியக் கலைஞர் ஆந்த்ரேஸ் இக்லெசியாஸ். இவர் கோப்ரே என்ற புனைபெயரில் தனது ஓவியக் கலைப் பணியைத் தொடர்ந்து வருகிறார். இவர் தற்போது அமெரிக்க நாட்டில் வடக்கு கலிபோர்னியாவிலுள்ள சான் பிரான்சிஸ்கோவின் பிரதான சாலையை ஒட்டிய உயரமான யூனியன் ஸ்கொயர் கட்டிடத்தின் பக்கச் சுவரில் கிரெட்டா துன்பெர்க்கின் ஓவியத்தை வரைந்து வருகிறார்.

 

இப்பணி அடுத்த வாரம் முடிவடையும் என்று அமெரிக்க செய்தி ஊடகமான எஸ்எஃப் கேட் கூறியுள்ளது.

இதுகுறித்து ஆந்த்ரேஸ் இக்லெசியாஸ், எஸ்எஃப் கேட் ஊடகத்தில் கூறியதாவது:

இப்பணியை முழுமையாக நிறைவு செய்வதில், எனது நேரத்தைச் செலவிட்டு வருகிறேன். நாம் இந்த உலகத்தைப் பேணிக் காக்க வேண்டும் என்பதை உணர்த்த இந்த சுவரோவியம் உதவும் என்று நம்புகிறேன்.

இதற்கு முன்பு சிகாகோவில் பிறந்த அமெரிக்க திரைப்பட நகைச்சுவை நடிகர் ராபின் வில்லியம்ஸ் பிம்பத்தை இதேபோல சான் பிரான்சிஸ்கோவில் சுவரோவியமாக வரைந்ததை மக்கள் கண்டு ரசித்தனர். ஆனால் தற்போது அந்த ஓவியம் இருந்த கட்டிடம் இடிக்கப்பட்டு விட்டது.

பின்னர், ‘சுற்றுச்சூழலுக்கான லாப நோக்கற்ற ஒன்அட்ஸ்பியர்.ஆர்க்’ இணையதளத்தை நடத்துபவர்கள் இந்தத் திட்டத்தைப் பற்றி என்னிடம் அணுகினர். ஒரு புதிய சுவரோவியத்திற்கான கட்டிடத்தைத் தேடி வருவதாக அவர்களிடம் தெரிவித்தேன். பின்னர் அவர்கள் எனக்கு இந்த இடத்தையும் அதற்கான பொறுப்பையும் வழங்கினர்’’.

இவ்வாறு இக்லெசியாஸ் (எ) கோப்ரே தெரிவித்தார்.

இக்லெசியாஸ் பற்றி environmental nonprofit oneatmosphere.org நிர்வாக இயக்குநர் பால் ஸ்காட் கூறுகையில், ”காலநிலை மாற்றச் செயற்பாட்டாளர்களை நாங்கள் கவுரவிக்க விரும்பினோம். அதற்கான தொடர்ச்சியான பணிகள் அவரிடம் வழங்க திட்டமிட்டுள்ளோம். முதலாவது படைப்பை உருவாக்குவதில் அவர் காட்டி வரும் ஆர்வம் இதற்கு ஓவியக் கலைப் படைப்பாளி கோப்ரே மிகச் சரியானவராக இருப்பார் என்று நம்பிக்கை உருவாகியுள்ளது” என்றார்.