புறாக்கள் துடிக்கும் வானம்!

346 0

இப்படி

எத்தனையெத்தனை

வெள்ளைப் புறாக்களை …

துப்பாக்கிகளை …

சப்பாத்துக் கால்களை …

சீருடைகளை …

கூண்டுகளை …

கண்டது எங்கள் வானம்.

0 0 0

மீள மீள
நம்மில் முளைத்த
அத்தனை நம்பிக்கை செடிகளின் மீதும்
வெந்நீரூற்றியது இந்த உலகம்.

ஒன்றன் பின் ஒன்றாக
நாம் நம்பிய
எல்லா அரிச்சந்திரர்களும்
மெதுமெதுவாய் பொய்யுரைத்தனர்.

அவர்களின்
தேன் தடவிய வார்த்தைகள்
நிறமிழந்து குருதி குடித்தன.

வெள்ளைப் புறாக்களின்
அவசர சத்தியங்கள்
வல்லூறுகளாய் மாறி
எங்கள் கோழிக்குஞ்சுகளை
கொத்துக் கொத்தாய்
தூக்கிச் சென்றன.

நம்பி நம்பிக் கழுத்தறுந்து போன
கறுப்புச் சரித்திரத்தின்
வாக்காளர்கள் நாங்கள்.

இந்த நாடு
எங்களுக்குத் தந்ததெல்லாம்
இரத்த மழையும்
கண்ணீர்க் கிணறும் தான்.

எங்களை அகதிகளாக்கி
பசியின் கோப்பைகளோடு
வரிசையில் நிறுத்தி
அழகு பார்த்தார்கள்
எல்லா கையறு அரசர்களும்.

0 0 0

ஒவ்வொரு முறையும்

நாங்கள்
வாக்குகளைத் தந்துவிட்டு
பதுங்கு குழிகளுக்குள் இறங்கினோம்.
வெளிச்சங்களை அணைத்து விட்டு
இருளைப் பருகினோம்.

நம்மை
காலடியில் வைத்திருக்க விரும்பும்
சிங்கங்களின்
நீலம் பாரித்த மூளையின் முன்
எல்லாப் பரிகளும் நரிகளாகின.

இப்போதும்
நாங்கள் வாக்களிக்கப் போகிறோம்.

எங்களிடம்
எந்த எதிர்பார்ப்பும் இல்லை.

உங்களின்
எந்த விஞ்ஞாபன வரிகளையும்
நாங்கள் வாசிக்கவேயில்லை.

ஆளுயர நிமிர்ந்திருக்கும்
உங்கள் பதாகைப் புன்னகைகளில்
எங்களுக்குச் சிறுதுளி நம்பிக்கையில்லை.

0 0 0

நாங்கள்
இப்போது தேடிக் கொண்டிருப்பதெல்லாம்

உங்களில்
குறைய கண்ணீர் தருபவரை …
குறைய இரத்தம் குடிப்பவரை …
குறைய கைது செய்கிறவரை …

நம் பிள்ளைகளைத் தின்னாதவரை …

நம் உறக்கங்களை
சப்பாத்துக் கால்களால் கலைக்காதவரை …

நம் விடியல்களை
மரணங்களால் எழுதாதவரை …

நமது அப்பாவிகளின்
சிறைக் கதவுகளை திறக்கிறவரை …

நம்மை நாமாய்
மதித்து நடக்கிற ஒரு மனிதரை ...

– தீபிகா –
09.11.2019
04.53 am