ஆபிரிக்காவின் மேற்கு பகுதியில் உள்ள மாலி நாட்டில் இராணுவ சோதனைச் சாவடியில் நடத்தப்பட்ட கொடூர தாக்குதலுக்கு நாட்டின் தகவல் தொடர்பு அமைச்சர் யயா சங்கரே, கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார்.
தீவிரவாத அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள மாலியில், நேற்று (வெள்ளிக்கிழமை) எல்லைப்பகுதியில் உள்ள மெனாகா பகுதியில் உள்ள சோதனைச் சாவடியில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 53 இராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். ஏராளமானோர் படுகாயமடைந்தனர்.
இந்நிலையில் இந்த கொடூர தாக்குதலுக்கு நாட்டின் தகவல் தொடர்பு அமைச்சர் யயா சங்கரே, கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றினை பதிவிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, “தீவிரவாதிகளின் இந்த தாக்குதல் கண்டனத்திற்கு உரியது. எதிர்பாராத விதமாக நடந்த இந்த கொடூர தாக்குதலில் 53 இராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். பொதுமக்களில் ஒருவரும் உயிரிழந்தார். 10 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்” என கூறியுள்ளார்.
இதுவரை இந்த தாக்குதலுக்கு எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்காத நிலையில், இதுகுறித்து புலனாய்வு பிரிவினர் தீவிர விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
கடந்த மாதம் இதே போன்று தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் மாலி நாட்டில் 40 இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மாலி நாட்டின் பல பகுதிகளில் முன்னர் அல் கொய்தா தீவிரவாத இயக்கத்தில் இருந்து பிரிந்துவந்த பல்வேறு ஆயுதம் தாங்கிய தீவிரவாத குழுவினர் அந்நாட்டில் இஸ்லாமிய சட்டத்திட்டங்களுக்கு உட்பட்ட ஆட்சியை நடத்த வேண்டும் என்ற வன்முறை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால், மாலியில் இராணுவவீரர்கள் மற்றும் பொலிஸாரை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலைமை சமீபகாலமாக உச்சம் தொட்டுள்ளது. இந்த தாக்குதல்களில் அண்மைக் காலமாக ஏராளமான பொதுமக்களும் காவுக் கொல்லப்படுகின்றனர். அத்தோடு தீவிரவாதிகள், அண்டை நாடான புர்கினா பாசோவிலும் காலூன்றி தாக்குதல் நடத்த தொடங்கி உள்ளனர்.
இதனால் தற்போது, தீவிரவாதிகளை ஒழித்துக் கட்டும் முயற்சியில், மாலி மற்றும் புர்கினா பாசோ நாடுகளின் இராணுவ படைகள் இணைந்து கூட்டு முயற்சியில் ஈடுபட்டுள்ளன.

