ஈராக் நாடாளுமன்றத்துக்கு ‘திடீர்’ தேர்தல்- அதிபர் அறிவிப்பால் பரபரப்பு

239 0

வன்முறை போராட்டங்களால் நிலை குலைந்து வரும் ஈராக் நாட்டில், பிரதமர் பதவி விலக முன்வந்துள்ளதால் நாடாளுமன்றத்துக்கு திடீர் தேர்தல் நடத்தப்படும் என அதிபர் அறிவித்துள்ளார்.

ஈராக் நாடு தொடர் போர்களால் சீரழிவை சந்தித்து வந்த நாடு ஆகும். சதாம் உசேன் ஆட்சிக்கு பிறகு அங்கு அரசியல் நிலைத்தன்மை இல்லாமல் போனது.
தொடர் போர்களால் நாட்டின் பொருளாதாரம் சீர் குலைந்து விட்டது. வேலை இல்லா திண்டாட்டம் தாண்டவமாடி வருகிறது. ஊழலுக்கு குறைவில்லை. இது மக்கள் மத்தியில் அரசின்மீது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
ஈராக் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்த மக்கள் திரண்டிருந்ததையும், பட்டாசுகள் கொளுத்தியதையும் படத்தில் காணலாம்.

இதன் காரணமாக பிரதமர் அதெல் அப்துல் மஹதிக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்து வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த போராட்டங்களில் போராட்டக்காரர்களுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே மோதல் வெடித்து வருகிறது. இதனால் தடியடி, கண்ணீர் புகை குண்டு வீச்சு, ரப்பர் குண்டால் சுடுவது அதிகரித்து வருகிறது.
இதுவரை அங்கு 250-க்கும் மேற்பட்டோர், போராட்டங்களில் பலியாகி உள்ளனர். ஆயிரக்கணக்கானோர் காயம் அடைந்துள்ளனர்.
பிரதமர் அதெல் அப்துல் மஹதி பதவி விலகியே தீர வேண்டும் என்று அவர்கள் உறுதியாக உள்ளனர். அங்குள்ள அரசியல் கட்சிகள், போராட்டங்களுக்கு தீர்வுகாண வேண்டும் என்று குரல் கொடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஈராக் அதிபர் பர்ஹாம் சாலி நாட்டு மக்களுக்கு நேற்று முன்தினம் டெலிவிஷனில் உரை ஆற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-
அரசியல் சாசன நெருக்கடி ஏற்படுவதை தவிர்க்கிற வகையில், அரசியல் சாசனத்துக்கு உட்பட்டு மாற்று ஏற்பாடு செய்தால், பதவி விலகுவதற்கும், ராஜினாமா கடிதம் அளிப்பதற்கும் தயார் என பிரதமர் கூறி விட்டார்.
நான் தனிப்பட்ட முறையில் அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறேன். அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் தேர்தல் மசோதா தாக்கல் செய்து நிறைவேற்றப்படும்.
அதன் பின்னர் நாடாளுமன்றத்துக்கு திடீர் தேர்தல் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஈராக்கில் கடந்த ஆண்டு மே மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடத்தப்பட்டுதான், பிரதமர் அதெல் அப்துல் மஹதி அரசு பதவி ஏற்றது என்பது நினைவுகூரத்தக்கது. இப்போது திடீர் தேர்தல் நடத்தப்படும் என அதிபர் அறிவித்து இருப்பது ஈராக்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.