பாகிஸ்தானில் தேஸ்காம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 65 ஆக உயர்ந்துள்ளது.
பாகிஸ்தானில் கராச்சி-ராவல்பிண்டி இடையே தேஸ்காம் எக்ஸ்பிரஸ் ரெயில் தினமும் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் இன்று காலை ரகிம் யார் கான் அருகே உள்ள லியாகத்பூரில் சென்றுகொண்டிருந்தபோது ஒரு பெட்டியில் திடீரென தீப்பிடித்தது. காற்றின் வேகத்தில் தீ கொழுந்துவிட்டு எரிந்தது. அருகில் உள்ள 2 பெட்டிகளுக்கும் தீ பரவியது.
இதையடுத்து ரெயில் நிறுத்தப்பட்டது. மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை கட்டுப்படுத்தி உள்ளே சிக்கியவர்களை மீட்டனர். இந்த விபத்தில் 16 பேர் உயிரிழந்ததாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் பலி எண்ணிக்கை 65 ஆக உயர்ந்துள்ளதாகவும், பலர் காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பயணிகள் காலை உணவு சமைத்த போது, சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து ஏற்பட்டது என பாகிஸ்தான் ரெயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர்ந்து அங்கு மீட்புப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

