பிலிப்பைன்ஸ் நாட்டை உலுக்கிய நிலநடுக்கம்- 5 பேர் உயிரிழப்பு

267 0

பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு மாகாணங்களை தாக்கிய நிலநடுக்கத்திற்கு இதுவரை 5 பேர் பலியாகி உள்ளனர்.

பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 6.3 அலகாக பதிவாகியிருந்தது. வடக்கு கோடபாட்டோ மாகாணத்தின் மகிலாலா நகரில் இருந்து தென்மேற்கில் 23 கிமீ தொலைவில் கடலுக்கடியில் 2 கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது.
இந்த நிலநடுக்கம் தெற்கு பகுதியில் உள்ள பல்வேறு மாகாணங்களை தாக்கியது. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து நீண்ட நேரம் நில அதிர்வும் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.
நிலநடுக்கம் ஏற்பட்டதால் பீதியடைந்த மக்கள் வெட்டவெளியில் திரண்ட காட்சி.
நிலநடுக்கத்தால் அப்பகுதியில் உள்ள ஏராளமான வீடுகள் மற்றும் வணிக கட்டிடங்கள் சேதமடைந்தன. சில பகுதியில் நிலச்சரிவும் ஏற்பட்டது.
துலுனன் நகரில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் 7 வயது குழந்தை உயிரிழந்தது. மிலங் நகரில் நிலநடுக்கம் ஏற்பட்டபோது அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு ஒருவர் பலியானார். வீட்டின் கூரை பெயர்ந்து விழுந்ததில் தூங்கிக்கொண்டிருந்த 2 வயது குழந்தை உயிரிழந்தது. இதேபோல் நிலச்சரிவில் வீடு புதைந்ததில் தாயும், குழந்தையும் உயிரிழந்தனர்.
நிலநடுக்கம் காரணமாக இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர். ஏராளமானோர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்று வருகிறது.