சிரியாவில் அப்பாவி மக்கள் 9 பேர் சுட்டுக்கொலை

227 0

குர்து இன போராளிகள் பிடியில் இருந்த நகரத்தில் அப்பாவி மக்கள் 9 பேரை துருக்கி ஆதரவு போராளிகள் நேற்று முன்தினம் சுட்டுக்கொன்றனர்.சிரியாவின் வட கிழக்கு பகுதியில் உள்ள குர்து இன போராளிகள் மீது துருக்கி தொடர்ந்து வான்தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில், அங்கு எல்லைப்பகுதியில் குர்து இன போராளிகள் பிடியில் இருந்த நகரத்தில் அப்பாவி மக்கள் 9 பேரை துருக்கி ஆதரவு போராளிகள் நேற்று முன்தினம் சுட்டுக்கொன்றனர். கொல்லப்பட்டவர்களில் பியூச்சர் சிரியா கட்சியின் பொதுச்செயலாளரான கெவ்ரின் கலாப்பும் அடங்குவார்.

35 வயதான இந்தப் பெண் தலைவர், தனது காரில் இருந்தபோது, காரில் இருந்து வெளியே இழுத்து வரப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. இந்த தாக்குதலுக்கு குர்து தலைமையிலான சிரிய ஜனநாயக படைகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

இதையொட்டி அந்த அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில், “ நிராயுதபாணிகளாக உள்ள அப்பாவி மக்கள் மீது துருக்கி இன்னும் தனது காட்டுமிராண்டித்தனமான குற்றவியல் கொள்கையை பின்பற்றி வருகிறது என்பதற்கு இந்த தாக்குதல் சான்று பகர்கிறது” என கூறி உள்ளது.

மேலும், “கெவ்ரின் கலாப்பை பொறுத்தமட்டில், அவர் ராஜதந்திர ரீதியில் செயல்படுவதில் வல்லவராக திகழ்ந்தார். அமெரிக்கர்கள், பிரான்ஸ் நாட்டினர், பிற வெளிநாட்டு தூதுக்குழுவினர் நடத்திய கூட்டங்களில் எல்லாம் அவர் கலந்து கொண்டிருக்கிறார். இப்போது அவர் சுட்டுக்கொல்லப்பட்டு விட்டார்” என்றும் கூறப்பட்டுள்ளது.