விக்கிரவாண்டி தொகுதியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி- மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரம்

30 0

விக்கிரவாண்டி தொகுதியில் வருகிற 12-ந் தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், தி.மு.க.தலைவர் மு.க.ஸ்டாலினும் தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளதால் பிரசாரம் சூடு பிடிக்க தொடங்கி உள்ளது.விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கு வருகிற 21-ந் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இந்த தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் முத்தமிழ்செல்வன், தி.மு.க. சார்பில் புகழேந்தி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கந்தசாமி மற்றும் சுயேட்சைகள் உள்பட 12 பேர் போட்டியிடுகிறார்கள்.

விக்கிரவாண்டி தொகுதியில் அ.தி.மு.க.- தி.மு.க. வேட்பாளர்கள் தீவிர ஓட்டு வேட்டை நடத்தி வருகிறார்கள்.

அ.தி.மு.க.வேட்பாளரை ஆதரித்து அமைச்சர்கள் சி.வி.சண்முகம், எம்.சி.சம்பத், பாண்டியராஜன், செங்கோட்டையன், கருப்பண்ணன், அன்பழகன், சேவூர் ராமச்சந்திரன், நிலோபர் கபில், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், அரசு கொறடா ராஜேந்திரன் மற்றும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், கட்சி நிர்வாகிகள் விக்கிரவாண்டியில் முகாமிட்டு பிரசாரம் செய்து வருகிறார்கள்.

மேலும் கிராமங்களில் வீடு, வீடாக சென்று இரட்டை இலை சின்னத்துக்கு ஆதரவு திரட்டி வருகிறார்கள்.

இந்தநிலையில் அ.தி.மு.க.வேட்பாளரை ஆதரித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விக்கிரவாண்டி தொகுதியில் வருகிற 12, 16, 18 ஆகிய தேதிகளில் பிரசாரம் செய்ய உள்ளார். 12-ந் தேதி மதியம் 1 மணிக்கு முண்டியம்பாக்கம் பகுதியில் இருந்து தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார்.

பின்னர் அவர் ராதாபுரம், விக்கிரவாண்டி, வி.சாத்தனூர், டி.புதுப்பாளையம் ஆகிய பகுதிகளில் தேர்தல் பிரசாரம் செய்கிறார்.

வருகிற 13-ந்தேதி துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் விக்கிரவாண்டி தொகுதியில் தேர்தல் பிரசாரம் செய்கிறார். அவர் அன்று மாலை 4 மணிக்கு பிரசாரத்தை சிந்தாமணியில் இருந்து தொடங்குகிறார். அதன்பின்பு பனையபுரம், வாக்கூர், கயத்தூர், விக்கிரவாண்டி ஆகிய பகுதிகளில் பிரசாரம் செய்கிறார்.

இதையடுத்து 14, 17 ஆகிய தேதிகளில் விக்கிரவாண்டி தொகுதியில் அவர் தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளார்.

இதேபோல் தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து எம்.பி.க்கள் ஜெகத்ரட்சகன், ஆ.ராசா, டி.ஆர்.வி. ரமேஷ், எம்.எல்.ஏ.க்கள் பொன்முடி, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், கே.என்.நேரு, எ.வ.வேலு, தா.மோ.அன்பரசன், கிருஷ்ணசாமி, முன்னாள் மேயர் சுப்பிரமணியன், கட்சி நிர்வாகிகள் விக்கிரவாண்டியில் முகாமிட்டு வாக்கு சேகரித்து வருகிறார்கள்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு கனிமொழி எம்.பி. விக்கிரவாண்டி தொகுதியில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் செய்து தீவிர ஓட்டு வேட்டை நடத்தினார்.

தி.மு.க.வேட்பாளரை ஆதரித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் விக்கிரவாண்டி தொகுதியில் பிரசாரம் செய்ய உள்ளார். அவர் வருகிற 12-ந் தேதி மாலை 4 மணிக்கு காணை பகுதியில் இருந்து பிரசாரத்தை தொடங்குகிறார். அதன் பின்பு மாம்பழப்பட்டு, கல்பட்டு, அன்னியூர், கெடார், சூரப்பட்டு, செம்பொன், திருக்கை ஆகிய பகுதிகளில் தேர்தல் பிரசாரம் செய்கிறார். இதைதொடர்ந்து 13, 18, 19 ஆகிய தேதிகளில் அவர் பிரசாரம் செய்கிறார்.

அதேபோல் தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வருகிற 14, 15 ஆகிய தேதிகளில் விக்கிரவாண்டி தொகுதியில் பிரசாரம் செய்ய உள்ளார்.

தி.மு.க.வேட்பாளரை ஆதரித்து ம.தி.மு.க.பொதுச் செயலாளர் வைகோ விக்கிவாண்டி தொகுதியில் இன்று மாலை பிரசாரம் செய்கிறார். அவர் மாலை 4 மணிக்கு நேமூர், கெடார், விக்கிரவாண்டி ஒன்றியம் ஆகிய பகுதிகளில் திறந்த வேனில் சென்று ஆதரவு திரட்டுகிறார்.