தாயகத் தமிழர்களின் உரிமைக்குரலாக தமிழ்நாட்டில் ஓங்கியொலித்த எழுக தமிழ்!

310 0

தமிழீழ உறவுகளின் உரிமைகளை மீட்போம் என்ற அறைகூவலுடன், யாழ் மண்ணில் தமிழ் மக்கள் பேரவையால் முன்னெடுக்கப்பட்டிருந்த எழுக தமிழ்-2019 எழுச்சிப் பேரணிக்கு வலுச்சேர்க்கும் வகையில் தமிழ்நாட்டிலும் எழுக தமிழ் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் ஏற்பாட்டில் ஈழ ஆதரவு அமைப்புகளின் பங்குபற்றுதலுடன் சென்னை வள்ளுவர்கோட்டத்தில் முன்னெடுக்கப்பட்டிருந்த எழுக தமிழ் நிகழ்வானது யாழ் மண்ணில் முன்னெடுக்கப்பட்ட சமநேரத்தில் நடாத்தப்பட்டிருந்தது. இந்நிகழ்வில்,

தமிழீழ உறவுகளின் உரிமைகளை மீட்போம்! தமிழின அழிப்பிற்கு நிதிகேட்போம்!
இலங்கை அரசே! தமிழர்களின் தாயகத்திலிருந்து இராணுவத்தை திரும்பப்பெறு!
சர்வதேசமே! இலங்கை இராணுவம் அபகரித்த தமிழர் நிலங்களை உரியவர்களிடம் ஒப்படை!
இலங்கை அரசே! தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்!
சர்வதேசமே! தமிழர் தாயகத்தில் சிங்கள பௌத்தமயமாக்கலை அனுமதிக்காதே!
சர்வதேசமே! இனப்படுகொலை செய்த சிங்கள இராணுவத்தை கூண்டில் நிறுத்து!
தமிழர் தாய்மண்ணை பிணக்குவியல் ஆக்கிய இலங்கை இராணுவத்தை கூண்டில் நிறுத்து!

ஆகிய முழக்கங்களை எழுப்பி கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

யாழ் மண்ணில் தமிழர்களின் உரிமைக்கான எழுகையாக தமிழ் மக்கள் பேரவையால் எழுக தமிழ்-2019 எழுச்சிப்பேரணி முன்னெடுக்கப்படவிருந்ததை அறிந்து, தாயுள்ளத்தோடு தமிழ்நாட்டிலும் ஈழத்தமிழர்களின் உரிமைக்குரலை ஓங்கி ஒலிக்க வேண்டுமென்ற உணர்வுடன் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன் அவர்களது முன்னேற்பாட்டில் இந்நிகழ்வு ஒழுங்குபடுத்தப்பட்டு நடாத்தப்பட்டிருந்தது.

த.வெள்ளையன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், ஐயா பழ நெடுமாறன், தொல்.திருமாவளவன், மல்லை சத்தியா, தமிமுன் அன்சாரி, தனியரசு, இயக்குநர் புகழேந்தி தங்கராஜ், இயக்குநர் வ.கௌதமன், வன்னியரசு, தோழர் தியாகு, மூத்த வழக்கறிஞர் துரைசாமி போன்ற ஈழத்தமிழர் ஆதரவுத் தலைவர்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான தமிழின உணர்வாளர்கள் பங்கேற்று உரிமைக்குரலெழுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.