காவிரியாறு 70 சதவீதம் அழிந்து விட்டது- ஜக்கி வாசுதேவ்

37 0

காவிரியாறு கடந்த 50 ஆண்டுகளில் 70 சதவீதம் அழிந்து விட்டது என்று திருச்சியில் ஜக்கி வாசுதேவ் தெரிவித்துள்ளார்.

தென்னிந்தியாவின் உயிர்நாடியான காவிரி நதிக்கு புத்துயிரூட்டவும், அதை சார்ந்துள்ள விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் ‘காவிரி கூக்குரல்’ என்ற இயக்கத்தை ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு தொடங்கியுள்ளார். இந்த இயக்கத்தின் மூலம் தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் காவிரி நதிப்படுகையில் அமைந்துள்ள விவசாய நிலங்களில் 12 ஆண்டுகளில் 242 கோடி மரங்கள் நட திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த இயக்கத்தில் இரு மாநில அரசுகள் மற்றும் விவசாயிகளின் பங்களிப்பை அதிகரிப்பதற்காக சத்குரு ஜக்கி வாசுதேவ், தல காவிரியில் இருந்து கடந்த 3-ந்தேதி மோட்டார் சைக்கிள் பேரணியை தொடங்கினார். ஓசூர், தருமபுரி, மேட்டூர், ஈரோடு வழியாக இப்பேரணி திருச்சியை வந்தடைந்தது. பேரணிக்கு பொதுமக்கள், விவசாயிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அப்போது சத்குரு ஜக்கி வாசுதேவ் நிருபர்களிடம் கூறியதாவது:-

நதிகளை மீட்போம் இயக்கம் நடத்திய போது நதிகள் இணைப்புக்கு ஆதரவு தெரிவிப்பதாக மக்களிடையே தவறான புரிதலை கொண்டு சேர்த்தது. நதிகள் இணைப்பை ஒரு போதும் வலியுறுத்தவில்லை. அதே போல ஆற்றுநீர் வீணாக கடலில் கலப்பதாக கூறுவதையும் ஏற்க முடியாது. ஆண்டு தோறும் ஆற்று நீர் கடலில் கலந்தால்தான் விளை நிலம் விளைநிலங்களாக இருக்கும். இல்லையெனில் கடல்நீர் புகுந்து உப்புத் தன்மை அதிகரித்து விடும்.

காவிரியாறு கடந்த 50 ஆண்டுகளில் 70சதவீதம் அழிந்து விட்டது. அவ்வப்போது ஓடும் வெள்ளப்பெருக்கை அடிப்படையாக கொண்டு 40 சதவீதம் மட்டுமே அழிந்து விட்டதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. ஆனால் 50 ஆண்டுகளுக்கு முன்பிருந்த காவிரியை ஒப்பிட்டால் 70 சதவீதம் அழிந்து விட்டது.

காவிரியை மீட்க வேளாண் காடுகள் வளர்ப்பை ஊக்குவிக்க வேண்டும். எனவேதான் காவிரி வடிநிலத்தில் 12 ஆண்டுகளில் 242 கோடி மரங்கள் நடும் இயக்கத்தை ஈஷா தொடங்கியுள்ளது. இதற்கு கர்நாடக, தமிழக அரசுகளும், மத்திய அரசும் ஆதரவு அளித்துள்ளது என்றார்.