பாப் பாடகியின் ரூ.17½ கோடி பங்களா ஜப்தி?

91 0

வரி ஏய்ப்பு வழக்கில் பாப் பாடகியின் ரூ.17½ கோடி மதிப்புள்ள பங்களாவை ஜப்தி செய்ய வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.இங்கிலாந்தை சேர்ந்தவர் பிரபல பாப் பாடகி கேட்டி பிரைஸ். பாடகியாக மட்டுமல்லாமல் மாடல் அழகி, எழுத்தாளர் என பன்முக திறமைகளை கொண்ட கேட்டி பிரைஸ் ஒரு தொழிலதிபராகவும் விளங்கி வருகிறார்.

பல்வேறு துறைகள் மூலம் வருவாய் ஈட்டி வரும் கேட்டி பிரைஸ், முறையாக வரி செலுத்தவில்லை என கூறப்படுகிறது. இந்த விவகாரம் கடந்த வருடம் விஸ்வரூபம் எடுத்ததை தொடர்ந்து, கேட்டி பிரைசுக்கு சொந்தமான 2 மில்லியன் பவுண்டு (இந்திய மதிப்பில் ரூ.17 கோடியே 60 லட்சத்து 54 ஆயிரம்) மதிப்புடைய சொகுசு பங்களாவை ‘ஜப்தி’ செய்ய நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இந்த ‘ஜப்தி’ நடவடிக்கையை தவிர்க்க 22,000 பவுண்டு வரி தொகையை செலுத்துவதாக கேட்டி பிரைஸ் வாக்குறுதி அளித்தார். ஆனால் அவர் அதை செய்யவில்லை. இதையடுத்து, தற்போது அவரது சொகுசு பங்களாவை ஜப்தி செய்ய மீண்டும் நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக லண்டனில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் அடுத்த மாதம் 14-ந்தேதி விசாரணை நடக்க இருக்கிறது. இதில் கேட்டி பிரைஸ் நேரில் ஆஜராகி விளக்கம் அளிப்பார். எனினும் கொடுக்கப்பட்ட வாய்ப்பை தவறவிட்டதால் அவரது பங்களாவை ஜப்தி செய்ய நீதிபதி உத்தரவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.