காஞ்சிபுரம் அருகே கல்குவாரி குடோனில் வெடி விபத்து – தொழிலாளி பலி

253 0

காஞ்சிபுரம் அருகே கல்குவாரி குடோனில் ஏற்பட்ட வெடி விபத்தில் தொழிலாளி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரத்தை அடுத்த மாகரல் அருகே உள்ள சித்தாலப்பாக்கத்தில் தனியார் கல்குவாரி உள்ளது. இங்கு பாறைகளை உடைக்க ஜெலட்டின் குச்சிகள் உள்ளிட்ட வெடிபொருட்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

வெடி பொருட்கள் அனைத்தும் கல்குவாரியில் உள்ள குடோனில் வைக்கப்பட்டு இருந்தது. இந்த குவாரியில் திருச்சியைச் சேர்ந்த மோகன் என்பவர் பழையசீவரத்தில் தங்கி வேலை பார்த்து வந்தார்.

நேற்று மதியம் குடோனில் இருந்த ஜெலட்டின் குச்சிகள் மற்றும் வெடிபொருட்கள் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதில் அந்த அறை முழுவதும் சிதறி தரை மட்டமானது.

இந்த வெடி விபத்தில் வண்டலூரை அடுத்த மேலக்கோட்டையூரைச் சேர்ந்த விஜயன், ஆற்பாக்கத்தைச் சேர்ந்த சூப்பர்வைசர் வினோத், மாகரல் பகுதியைச் சேர்ந்த காவலாளி லோகநாதன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

மேலும் தொழிலாளி மோகன் என்பவர் மாயமாகி விட்டார். குடோனில் இருந்த கூரைகள், கற்கள் உடைந்து சிதறியதில் கல்குவாரி குட்டை மற்றும் வயல்வெளியில் மேய்ந்து கொண்டிருந்த சித்தாலப்பாக்கத்தைச் சேர்ந்த நடராஜன் என்பவருக்கு சொந்தமான 42 ஆடுகள் இறந்தன.

குடோன் வெடித்து சிதறிய சத்தம் 4 கிலோ மீட்டர் தூத்துக்கு கேட்டது. தகவல் அறிந்ததும் அப்பகுதி மக்கள் ஏராளமானோர் அங்கு திரண்டனர்.

வெடி விபத்தில் காயம்

 

காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, டி.எஸ்.பி. கலைச்செல்வன் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

காஞ்சிபுரம் தீயணைப்பு வீரர்கள் அங்கு சிதறி கிடந்த கற்குவியலை அகற்றினர். அப்போது தொழிலாளி ஒருவரின் உடல் பாகங்கள் தனித்தனியாக கிடைத்தது.

எனவே இறந்து போனது மாயமான தொழிலாளி மோகன் என்பவரது உடலாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

மீட்கப்பட்ட உடல் அடையாளம் தெரியாத அளவுக்கு சிதைந்து இருப்பதால் அது மோகன் உடல்தானா? என்பதை டி.என்.ஏ. பரிசோதனை செய்ய முடிவு செய்து உள்ளனர். அதன் பின்னரே உடல் ஒப்படைக்கப்படும் என்று தெரிகிறது.

கல்குவாரி குடோனில் அனுமதி பெற்ற அளவு வெடி பொருட்கள் வைக்கப்பட்டதா? போதிய பாதுகாப்பு இருந்ததா? என்பது குறித்து மாகரல் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வெடி விபத்து குறித்து போலீசார் கூறும்போது, “வெடி பொருட்கள் வைத்திருந்த அறை அருகே யாரோ ஒருவர் மொபைல் செல்போனில் பேசியபடி சென்றதால் விபத்து நடந்து உள்ளது” என்று தெரிவித்தனர்.