காது கேளாத பள்ளி மாணவர்களுடன் விஜயகாந்த் பிறந்த நாள் கொண்டாட்டம்

331 0

சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை அலுவலகத்தில் காது கேளாத பள்ளி மாணவர்களுக்கு விஜயகாந்த் நலத்திட்ட உதவிகளை வழங்கி பிறந்தநாளை கொண்டாடினார்.

தே.மு.தி.க. நிறுவன தலைவர் விஜயகாந்த் பிறந்த நாள் 25-ந் தேதி நாளை (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி கோயம்பேட்டில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. எம்.ஜி.ஆர். காது கேளாதோர் பள்ளி மாணவர்களுக்கு ஆண்டு தோறும் வழங்கப்பட்டு வரும் மதிய உணவு நிதியாக ரூ. 50 ஆயிரத்துக்கான காசோலையை விஜயகாந்த் வழங்கினார்.

தமிழகத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு ரூ. 1.5 கோடி மதிப்புள்ள 1500 குடி தண்ணீர் சுத்திகரிப்பு ஆர்.ஓ. மிஷின்கள் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் பொருளாளர் பிரேமலதா அவைத்தலைவர் இளங்கோவன், துணை செயலாளர்கள் பார்த்த சாரதி, எல்.கே.சுதீஷ், சந்திரா, அக்பர், கொள்கை பரப்பு செயலாளர் அழகாபுரம் மோகன்ராஜ், மாவட்ட செயலாளர் போரூர் தினகரன், வேளச்சேரி பி.பிரபாகரன், வக்கீல் விசாகன் ராஜா, ப.மதிவாணன், வி.சி. ஆனந்தன், கே.பாலசுப்பிரமணி, பகுதி செயலாளர் சதிஷ்காந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது:-

கேப்டன் பிறந்தநாள் விழா வருடந்தோறும் நடைபெற்று வருகிறது. இன்னும் நூறு வருடங்கள் ஆனாலும் இது தொடரும். சினிமா காலம் முதல் தற்போது வரை ஏறத்தாழ 40 ஆண்டு காலமாக விஜயகாந்த் ஏழை எளியவர்களுக்கு உதவி செய்து வருகிறார்.

இந்த முறை தமிழகத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தண்ணீர் சுத்திகரிப்பு ஆர்.ஓ. மெஷின்கள் வழங்கப்பட உள்ளது. அதை எங்கள் மாவட்ட செயலாளர்கள் மூலம் எல்லா மாவட்டத்திற்கும் அனுப்பி வைக்கப்படும்.

அமேசான் காடு எரிந்து வருவது மிகவும் வேதனையான செய்தி. இனி வருங்காலத்தில் மரம் நடுவது மிகவும் அவசியம் அதை தே.மு.தி.க. தொண்டர்கள் செய்வார்கள். அதே போல தமிழகம் முழுவதும் உள்ள ஏரி, குளங்கள் தே.மு.தி.க. தொண்டர்களால் விரைவில் தூர் வாரப்படும்.

திருப்பூரில் வருகிற 15-ந் தேதி தே.மு.தி.க. முப்பெரும் விழா கேப்டன் தலைமையில் நடைபெற உள்ளது எதை இலக்காக கொண்டு தே.மு.தி.க. தொடங்கப்பட்டதோ அந்த இலக்கை அடைந்தே தீருவோம் என்பதை இந்த நல்ல நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.