மதுரை மத்திய சிறையில் போலீசார் சோதனை- போதை பொருட்கள் சிக்கியது

256 0

மதுரை மத்திய சிறையில் போலீசார் இன்று அதிகாலை நடத்திய அதிரடி சோதனையில் போதைப்பொருட்கள் சிக்கியது.

மதுரை மத்திய சிறையில் 1,500-க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். இந்த நிலையில் சிறையில் தடை செய்யப்பட்ட கஞ்சா, புகையிலை பொருட்கள் தாராளமாக புழக்கத்தில் உள்ளதாக போலீசாருக்கு ரசகிய தகவல்கள் வந்தன.

இதையடுத்து திலகர் திடல் சட்டம்-ஒழுங்கு போலீஸ் உதவி கமி‌ஷனர் வெற்றிச்செல்வன் தலைமையில் 150-க்கும் மேற்பட்ட போலீசார் இன்று அதிகாலை 5 மணியளவில் சிறைக்கு சென்றனர். அதைத்தொடர்ந்து சிறைச் சாலையின் நுழைவு வாயில் கதவுகள் மூடப்பட்டன.

பின்னர் ஜெயிலுக்குள் கைதிகளின் அறை, சமையல்கூடம், திறந்த வெளி மைதானம் உள்பட அனைத்து பகுதிகளிலும் போலீசார் அங்குலம், அங்குலமாக சோதனை நடத்தினர். இந்த சோதனையில் சிகரெட், பீடி, பிளேடு மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் சிக்கியது.

மத்திய ஜெயிலுக்குள் போலீசாரின் பாதுகாப்பு, கெடுபிடிகளையும் தாண்டி சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் சிக்கியது சிறைத்துறை போலீசாரை அதிர வைத்து உள்ளது.

போலீசாரின் அதிரடி சோதனை 7 மணி வரை நீடித்தது. சோதனையின் போது மதுரை மத்திய சிறை டி.ஐ.ஜி. பழனி, போலீஸ் சூப்பிரண்டு ஊர்மிளா உள்ளிட்ட சிறைத்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர். சிறையில் தடை செய்யப்பட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.