இன்றும், நாளையும் மழை நீடிக்கும் – வானிலை மையம் அறிவிப்பு

382 0

வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் இன்றும், நாளையும் சென்னை உள்பட வட மாநிலங்களில் மழை நீடிக்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்பசலனம் காரணமாக தென்மேற்கு பருவ மழை கடந்த 2 நாட்களாக பெய்து வருகிறது. வட மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் கனமழை பெய்துள்ளது.

நேற்று முதல் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர் உள்பட பல மாவட்டங்களில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பல இடங்களில் கன மழையும் பெய்து வருகிறது.

சென்னை, நுங்கம்பாக்கத்தில் 17 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. மீனம்பாக்கத்தில் 27 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. நேற்று இரவு முதல் சென்னை, புறநகர் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இன்றும் விடாமல் மழை பெய்தது.

எழும்பூர், பாரிமுனை, கோயம்பேடு, வடபழனி, கிண்டி, அடையாறு, பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், கூடுவாஞ்சேரி, மேடவாக்கம், மறைமலை நகர், வேளச்சேரி, துரைப்பாக்கம், சோழிங்க நல்லூர், நீலாங்கரை, திருவான்மியூர், மயிலாப்பூர், வண்ணாரப்பேட்டை, திருவொற்றியூர், அம்பத்தூர், ஆவடி, திருமுல்லைவாயில், பூந்தமல்லி, ஸ்ரீபெரும்புதூர் உள்பட பல இடங்களில் இன்று காலை விடாமல் மழை பெய்தது. இதனால் ரோடுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

இன்று இதுபோல பல இடங்களில் மழை நீடிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை மைய இயக்குனர் புவியரசன் கூறியதாவது:-

தமிழகம், புதுச்சேரியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் இன்று இரவு சென்னை, வேலூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்பட 15 மாவட்டங்களில் மழை பெய்யும். ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும். இந்த மழை நாளை யும் தொடர்ந்து பெய்யும்.

இவ்வாறு அவர் கூறினார்.

சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகளுக்கு மழை தண்ணீர் வரவில்லை. மழை தண்ணீரை காய்ந்த தரை பகுதியே ஈர்த்துவிட்டது.

இதனால் ஏரிகளில் ஈரப்பதம் மட்டுமே உள்ளது. ஆங்காங்கே திட்டு திட்டாக மழை தண்ணீர் காணப்படுகிறது. இன்னும் 4 நாட்கள் தொடர்ந்து மழை பெய்தால் தான் ஏரிகளுக்கு தண்ணீர் வரும் என பொதுப் பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.