அரியானாவில் கற்பழிப்பு புகாரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது

25 0

அரியானாவில் கற்பழிப்பு புகாரில் சிக்கிய போலீஸ் இன்ஸ்பெக்டர் மீதான குற்றம் உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து நேற்று அவர் கைது செய்யப்பட்டார்.அரியானா மாநிலத்தின் ஜிந்த் மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவருக்கும், அவரது கணவருக்கும் இடையே தகராறு இருந்து வந்தது. இது தொடர்பாக புகார் கொடுப்பதற்காக குர்கானில் உள்ள அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு அவர் சென்றார். அப்போது சதர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் தல்பிர் சிங் என்பவர் அந்த பெண்ணுக்கு பழக்கமானார்.

அந்த பெண்ணின் செல்போன் எண்ணை பெற்றுக்கொண்ட தல்பிர் சிங் தொடர்ந்து போனில் பேசி வந்தார். பின்னர் ஒருநாள் அந்த பெண்ணை காரில் அழைத்துச் சென்ற அவர், யாரும் இல்லாத இடத்தில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது.

இதற்கு நியாயம் கேட்பதற்காக அந்த பெண் போலீஸ் இன்ஸ்பெக்டரின் வீட்டுக்கு சென்ற போது, அவருக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து மீண்டும் கற்பழித்து விட்டார். அதை வீடியோவும் எடுத்த தல்பிர் சிங், அதை காட்டி மிரட்டியபடியே தனது ஆசைக்கு இணங்குமாறு தொடர்ந்து மிரட்டி வந்துள்ளார்.

இது குறித்து அந்த பெண் அளித்த புகாரின் பேரில் தல்பிர் சிங் மீது துறைரீதியான விசாரணை நடத்தப்பட்டது. இதில் குற்றம் உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து நேற்று அவர் கைது செய்யப்பட்டார்.