மு.க.ஸ்டாலினிடம் கதிர் ஆனந்த் எம்.பி. வாழ்த்து பெற்றார்

265 0

மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற கதிர் ஆனந்த் எம்.பி. வாழ்த்து பெற்றார்.

மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற கதிர் ஆனந்த் எம்.பி. வாழ்த்து பெற்றார். பின்னர் கருணாநிதி உள்பட தலைவர்கள் நினைவிடங்களில் மரியாதை செலுத்தினார்.

வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கதிர் ஆனந்த், கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெறுவதற்காக நேற்று காலை 10.45 மணி அளவில் சென்னை அண்ணா அறிவாலயத்துக்கு வந்தார். அவருடைய தந்தையும், தி.மு.க.வின் பொருளாளருமான துரைமுருகன், வேலூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் பொறுப்பாளர் ஜெகத்ரட்சகன் எம்.பி. ஆகியோரும் உடன் வந்தனர்.

தொடர்ந்து மு.க.ஸ்டாலினிடம் வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை காண்பித்து, கதிர் ஆனந்த் எம்.பி. வாழ்த்து பெற்றார். இதையடுத்து அறிவாலயத்தில் உள்ள பேரறிஞர் அண்ணா, கருணாநிதி ஆகியோர் சிலைக்கு கீழே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவர்களுடைய உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
மரியாதை
சென்னை கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதியின் இல்லத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் புகைப்படத்துக்கு கதிர் ஆனந்த் எம்.பி. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதேபோல அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடத்திலும் அவர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அப்போது தி.மு.க. வெற்றியை காணிக்கையாக்கும் வகையில் வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் கதிர் ஆனந்த் வெற்றி பெற்றதற்காக வழங்கப்பட்ட சான்றிதழை வைத்து, மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து வேப்பேரியில் உள்ள பெரியார் நினைவிடத்தில் கதிர் ஆனந்த் எம்.பி. மரியாதை செலுத்தினார். முன்னதாக அவருக்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி இனிப்பு கொடுத்து வரவேற்றார். இதையடுத்து தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகனை அவருடைய இல்லத்தில் சந்தித்து கதிர் ஆனந்த் வாழ்த்து பெற்றார்.