அமெரிக்கா, தென்கொரியா கூட்டு போர் பயிற்சிக்கு எதிராக வடகொரியா, மீண்டும் ஏவுகணை சோதனை

544 0

அமெரிக்கா, தென்கொரியா கூட்டு போர் பயிற்சிக்கு எதிராக 2 குறுகிய தொலைவு ஏவுகணைகளை ஏவி வட கொரியா சோதித்துள்ளது.அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் சமீபத்தில் தன் நட்பு நாடான தென்கொரியாவுக்கு சென்றார். அப்போது அவரை கொரிய எல்லையில், ராணுவம் விலக்கிக்கொள்ளப்பட்ட பகுதியில், வட கொரிய தலைவர் கிம் ஜாங் அன் சந்தித்துப் பேசினார்.

இந்த சந்திப்பு இணக்கமான முறையில் நடந்ததாக தகவல்கள் வெளிவந்தன. இரு நாடுகளும் கொரிய தீபகற்ப பகுதியை அணு ஆயுதமற்ற பகுதியாக மாற்றுவதற்கு தொடர்ந்து பேசுவது என ஒப்புக்கொண்டதாகவும் கூறப்பட்டது.

அதைத் தொடர்ந்து கிம் ஜாங் அன்னிடம் இருந்து தனக்கு ஒரு அழகான கடிதம் வந்துள்ளதாக டிரம்ப் சமீபத்தில் தெரிவித்தார். இருப்பினும் அமெரிக்காவும், தென்கொரியாவும் போர் பயிற்சியில் ஈடுபடுவது கிம் ஜாங் அன்னுக்கு கடும் அதிருப்தியை அளித்துள்ளது. இதன் காரணமாக அவர் இரு நாடுகளுக்கும் அச்சுறுத்தல் ஏற்படுகிற வகையில் மீண்டும் பாலிஸ்டிக் ரக ஏவுகணைகளை ஏவி சோதித்து வருகிறார்.

அந்த வகையில் நேற்று ஒரே நாளில் 2 குறுகிய தொலைவு ஏவுகணைகளை ஏவி வட கொரியா சோதித்துள்ளது. இந்த ஏவுகணைகள், தெற்கு ஹேம்கியாங் மாகாணத்தில் ஹாம்ஹங் நகரில் இருந்து ஏவப்பட்டுள்ளன. அவை, 400 கி.மீ. தொலைவுக்கு பறந்து சென்று, கொரிய தீபகற்பத்தில் இருந்து கிழக்கில் ஜப்பான் கடலில் போய் விழுந்துள்ளது.

2 வாரங்களில் 5-வது முறையாக ஏவுகணைகளை வடகொரியா சோதித்து பார்த்து இருப்பது உலக நாடுகளை அதிர வைத்துள்ளது.