வைகோ- காங்கிரஸ் மோதல்: சத்தியமூர்த்தி பவனில் போலீஸ் பாதுகாப்பு

423 0

ம.தி.மு.க., காங்கிரஸ் இடையே ஏற்பட்டுள்ள மோதல் காரணமாக சத்தியமூர்த்தி பவனில் நேற்று இரவு முதல் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பாராளுமன்ற மேல்-சபையில் காஷ்மீர் பிரச்சனை குறித்து பேசும் போது, காங்கிரசை கடுமையாக விமர்சனம் செய்தார்.

வைகோவின் பேச்சுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி பதிலடி கொடுத்தார். இதற்கு பதில் அளித்த வைகோ, “காங்கிரஸ் தயவால் நான் மேல் சபை எம்.பி. ஆகவில்லை. தமிழ் இனத்தை அழித்தது காங்கிரஸ்” என்று மீண்டும் கடுமையாக தாக்கினார்.

இதற்கு தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி. கே.எஸ். இளங்கோவன் கண்டனம் தெரிவித்தார். “வைகோ துரோகம் செய்யபவர்” என்றும் குற்றம் சாட்டி னார். தொடர்ந்து, வைகோ- காங்கிரஸ் மோதல் தீவிரம் அடைந்து வருகிறது.

வைகோ- காங்கிரஸ் மோதலையடுத்து, இரு கட்சி தொண்டர்களிடையே கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இலங்கை தமிழர்கள் விவகாரத்தின் போது காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்திய மூர்த்தி பவன் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

தற்போது, ம.தி.மு.க. காங்கிரஸ் இடையே ஏற்பட்டுள்ள மோதல் காரணமாக ம.தி.மு.க. தொண்டர்கள் சத்தியமூர்த்தி பவன் முன்பு போராட்டம் நடந்தலாம் என்ற தகவல் உளவுத்துறை போலீசாருக்கு கிடைத்துள்ளது. இதையடுத்து சத்தியமூர்த்தி பவனில் நேற்று இரவு முதல் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.