ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் அவசரப்படத் தேவையில்லை – செல்வம்

382 0

எந்தவொரு கட்சியும் தமது ஜனாதிபதி வேட்பாளர் குறித்து உத்தியோகபூர்வமாக அறிவிக்காத நிலைமையே தற்போது காணப்படுகிறது. இந்நிலையில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் அவசரப்படத் தேவையில்லை என்று தெரிவித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், இது தொடர்பில் தமது கட்சி இதுவரை எந்த ஒரு தீர்க்கமான முடிவுகளையும் எடுக்கவில்லை என்றும் குறிப்பிட்டார்.

நாம் முடிவுகள் எடுப்பதற்கு யார் வேட்பாளராக முன்னிறுத்தப்படுகின்றார்கள் என்பது அறிவிக்கப்படல் வேண்டும்.  ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர்கள் யார் என்பதில் எமது கட்சி அதிக கவனம் செலுத்தப் போவதில்லை. குறித்த கட்சிகளினால் வெளியிடப்படும் தேர்தல் விஞ்ஞாபனத்தையே நாங்கள் கூர்ந்து அவதானிப்போம்.

அவர்களுடைய தேர்தல் விஞ்ஞாபனத்திலே தமிழ் மக்களுடைய தேசிய பிரச்சினைகளுக்கும், மக்கள் எதிர் நோக்குகின்ற ஏனைய அரசியல், அன்றாட பிரச்சினைகளுக்காக முன் வைக்கப்போகின்ற தீர்வுகள், எப்படி அப்பிரச்சினைகளை அணுகுகிறார்கள் என்பது தொடர்பில் நாங்கள் அவதானிப்போம்.

மேலும் எமது மக்களின் அபிலாசைகளையும் நிலைப்பாட்டினையும் நாங்கள் துல்லியமாக உணர்ந்துள்ளோம். அதே போன்று நமது போராட்டங்களுக்கும், அரசியல் நில்லைப்பாடுகளுக்கு ஆதரவு அளித்துக் கொண்டிருக்கின்ற சர்வதேச சமுகத்தின் விருப்பினையும், நிலைபாட்டினையும் தெரிந்து கொண்ட பின்னர் முடிவினை எட்டுவது உசிதமாக இருக்கும் என கருதுவதாகவும் அவர் கூறினார்.