பிரான்சு கிளிச்சியில் இடம்பெற்ற 17 மனிதநேயப் பணியாளர்களின் 13 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு!

719 0

சிறீலங்கா இனவாதப் படைகளால் 04.08.2006 அன்று மூதூரில் படுகொலைசெய்யப்பட்ட பட்டினிக்கு எதிரான அமைப்பைச் சேர்ந்த 17 பணியாளர்களின் 13 ஆவது ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு இன்று (04.08.2019) வெள்ளிக்கிழமை காலை 11.00 மணிக்கு, பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, பிரான்சு கிளிச்சி பிராங்கோ தமிழ்சங்கத்தின் ஏற்பாட்டில் கிளிச்சிப்பகுதியில் குறித்த பணியாளர்கள் நினைவாக அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபிக்கு முன்பாக இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பொதுச்சுடரை கிளிச்சி பிராங்கோ தமிழ்ச் சங்க உப தலைவர் திரு. பரராசசிங்கம் அவர்கள் ஏற்றிவைக்க ஈகைச்சுடரை 11.11.1993 அன்று பூநகரிப் பகுதியில் இடம்பெற்ற மோதலில் சாவடைந்த கப்டன் இராவணன் கோணேஸ் அவர்களின் சதோரன் ஏற்றிவைத்தார். மலர்வணக்கத்தை பட்டினிக்கு எதிரான அமைப்பின் மூதூரில் குறித்த 17 பணியாளர்களுடன் பணியாற்றிய முன்னாள் பணியாளர் திரு.ஜெயகாந் அவர்கள் செலுத்தியிருந்தார்.

அகவணக்கத்தைத் தொடர்ந்து நிகழ்வில் கலந்துகொண்ட அனைவரும் மலர்வணக்கம் செலுத்தினர்.தொடர்ந்து குறித்த 17 பணியாளர்கள் தொடர்பான நினைவுரைகள் இடம்பெற்றன. நினைவுரைகளை கிளிச்சி பிராங்கோ தமிழ்ச் சங்கத் தலைவர் திரு. க.சச்சிதானந்தம், பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பரப்புரைப்; பொறுப்பாளர் திரு. மேத்தா, தமிழீழ மக்கள் பேரவைப் பொறுப்பாளர் திரு.திருச்சோதி ஆகியோர் ஆற்றியிருந்தனர்.இவர்களுடன் கிளிச்சி தமிழ் இளையோர் அமைப்பைச் சேர்ந்த உறுப்பினர்கள் பிரெஞ்சுமொழியிலும் தமிழ் மொழியிலும் உரையாற்றினர்.

கிளிச்சி பிராங்கோ தமிழ்ச் சங்கத் தலைவர் திரு. க.சச்சிதானந்தம் அவர்கள், பட்டினிக்கு எதிரான அமைப்பின் மூதூரில் குறித்த 17 பணியாளர்களுடன் பணியாற்றிய முன்னாள் பணியாளர் திரு.ஜெயகாந் அவர்களிடம் குறித்த பணியாளர்களின் விசாரணைகள் தொடர்பான இன்றைய நிலைப்பாடுகள் குறித்து கேள்விகளை முன்வைத்திருந்தார். இதற்குப் பதிலளித்த அவர், 2014 இற்குப்பின்னர் குறித்தவிடயம் தொடர்பாக ஆலொசனைக் குழுவொன்றை அமைத்து எமது பட்டினிக்கு எதிரான அமைப்பின் நிர்வாகப்பிரிவு உத்தியோகத்தர்களுடன் நாம் தொடர்பாடல்களைப் பேணிவருகின்றோம். அதன் முதற்கட்ட நடவடிக்கையாக கடந்த யூன் 6 ஆம் திகதி சிறிலங்கா சட்டமா அதிபர் திணைக்களத்தால், குறித்த பணியாளர்களின் கொலை தொடர்பான வழக்கு விசாரணைகளைத் துரிதப் படுத்துமாறு பணிக்கப்பட்டுள்ளது. இங்கு பரிசில் பட்டினிக்கு எதிரான அமைப்பின் வழக்கறிஞர்கள் மற்றும் வேறு அமைப்புக்களின் சட்ட வல்லநர்களும் இணைந்து ஒரு குழுவை அமைத்து செயற்பட்டுவருகின்றனர் என்று தெரிவித்த அவர் இவ்விடயத்தில் நல்ல ஒரு தீர்வு கிட்டும் என நம்பிக்கை வெளியிட்டார்.

இவர்களுடன் ஏனைய கட்டமைப்புக்களின் செயற்பாட்டாளர்கள், கிளிச்சி தமிழ்ச்சோலை ஆசிரியர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டு தமது நினைவு வணக்கத்தைச் செலுத்தியிருந்தனர்.
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரக மந்திரத்துடன் நிகழ்வு நிறைவடைந்தது.