பிரான்சில் சிறப்பாக இடம்பெற்ற லெப்.கேணல் விக்ரர் அவர்களின் நினைவுசுமந்த உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டி!

618 0

ஈழத்தமிழர் உதைபந்தாட்டச் சம்மேளனம் – பிரான்சின் அனுசரணையில் பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – தமிழர் விளையாட்டுத்துறை 13 ஆவது தடவையாக நடாத்திய லெப்.கேணல் விக்ரர் (ஒஸ்கா) அவர்களின் நினைவுசுமந்த அனைத்துலக ரீதியிலான உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டி நேற்று (28.07.2019) ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகி சிறப்பாக இடம்பெற்றது.

முன்னதாக பொதுச்சுடரினை 95 விளையாட்டுக்கழகத்தின் தலைவர் திரு.யூட் ரமேஸ் அவர்கள் ஏற்றிவைக்க, பிரெஞ்சுத் தேசியக்கொடியை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு நிர்வாகப்பொறுப்பாளர் திரு.பாலசுந்தரம் அவர்கள் ஏற்றிவைத்தார்.

தொடர்ந்து தமிழீழத் தேசியக்கொடியை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு- தமிழர் விளையாட்டுத்துறைப் பொறுப்பாளர் திரு.கிருபா அவர்கள் ஏற்றிவைத்தார்.
லெப்.கேணல் விக்ரர் (ஒஸ்கா) அவர்களின் திருவுருவப்படத்திற்கான ஈகைச்சுடரினை 21.11.2000 அன்று நாகர்கோயில் பகுதியில் இடம்பெற்ற சமரில் வீரகாவியமடைந்த மேஜர் நற்குணம் அவர்களின் சகோதரி ஏற்றிவைத்து மலர்வணக்கம் செலுத்தினார். தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டது.

ஈழத்தமிழர் உதைபந்தாட்டச் சம்மேளனத்தின் கொடியை சம்மேளனத்தின் தலைவர் திரு.கிருபானந்தன் அவர்கள் ஏற்றிவைத்தார்.
தொடர்ந்து பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு நிர்வாகப்பொறுப்பாளர் திரு.பாலசுந்தரம் அவர்கள் ஆரம்ப உரையை ஆற்றியிருந்தார். வெளிநாட்டில் இருந்து அழைப்பை ஏற்றுவந்த கழகங்களையும் வரவேற்றதுடன் அனைத்துக் கழகங்களினதும் வீரர்களினதும் ஒத்துழைப்பை வேண்டிக்கொண்டார்.

போட்டிகள் ஆரம்பித்துவைப்பதற்கு பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுப் பொறுப்பாளர் திரு.மகேஸ், நெதர்லாந்து தமிழர் ஒருங்கிணைப்புக்குழுப் பொறுப்பாளர் திரு.ஜெயா, பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு தமிழர் விளையாட்டுத்துறைப் பொறுப்பாளர் திரு.கிருபா, சுவிஸ் தமிழர்ஒருங்கிணைப்புக்குழு விளையாட்டுத்துறைப்பொறுப்பாளர் திரு.திருக்குமரன், மேஜர் நற்குணம் அவர்களின் சகோதரி, நெதர்லாந்து தமிழர் ஒருங்கிணைப்புக்குழு துணைப்பொறுப்பாளர் திரு.கஜன், பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு துணைப்பொறுப்பாளர் திரு.சுதர்சன், ஈழத்தமிழர் உதைபந்தாட்டச் சம்மேளனத்தின் தலைவர் திரு.கிருபானந்தன் ஈழத்தமிழர் உதைபந்தாட்டச் சம்மேளனத்தின் செயலாளர்; திரு.ஜெயந்தன் ஆகியோர் வீரர்களுக்கு கைலாகு கொடுத்து வாழ்த்தி போட்டிகளை ஆரம்பித்துவைத்தனர்.

சமநேரத்தில் மூன்று மைதானங்களில் போட்டிகள் மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்றிருந்தன.
15 வயதுக்கு உட்பட்ட அணியில் இறுதிப்போட்டிக்கு சுவிஸ் தெரிவு அணியும், பிரான்சு ரோமியோ நவம்பர் அணியும் தெரிவாகியிருந்தன. மைதானத்தில் குறித்த இரு அணியினதும் வீரர்களுக்கு கைலாகு கொடுக்கப்பட்டு போட்டிகள் ஆரம்பித்துவைக்கப்பட்டன.

அத்தோடு, வளர்ந்தோர் பிரிவில் இறுதிப்போட்டிக்கு, ஈழவர் விளையாட்டுக்கழகமும், எவ்.சி.நெவ் துறுவா விளையாட்டுக்கழகமும் தெரிவாகியிருந்தன. மைதானத்தில் குறித்த இரு அணியினதும் வீரர்களுக்கு கைலாகு கொடுக்கப்பட்டு போட்டிகள் ஆரம்பித்துவைக்கப்பட்டன.
போட்டிகளின் நிறைவில் வெற்றிபெற்ற கழகங்களுக்கும் வீரர்களுக்கும் வெற்றிக்கிண்ணங்களும் பதக்கங்களும் வழங்கப்பட்டதுடன், வளர்ந்தோர் பிரிவில் வெற்றியீட்டிய முதல் மூன்று பிரிவினருக்கு பணப் பரிசும் வழங்கப்பட்டது.

15 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில்
முதலிடத்தை சுவிஸ் தெரிவு அணியும் இரண்டாமிடத்தை பிரான்சு ரோமியோ நவம்பர் அணியும் தமதாக்கிக் கொண்டன.

வளர்ந்தோர் பிரிவில்
முதலிடத்தை எவ்.சி. நெவ் துறுவா விளையாட்டுக்கழகம் பெற்று வெற்றிக்கிண்ணத்தையும் 1000 ஈரோ பணப்பரிசையும் தமதாக்கிக்கொண்டனர்.
இரண்டாமிடத்தை ஈழவர் விளையாட்டுக்கழகம் பெற்று வெற்றிக்கிண்ணத்தையும் 500 ஈரோ பணப்பரிசையும் தமதாக்கிக்கொண்டனர்.
மூன்றாமிடத்தை என்.எஸ்.பரிஸ் விளையாட்டுக் கழகம் பெற்று வெற்றிக்கிண்ணத்தையும் 250 ஈரோ பணப்பரிசையும் தமதாக்கிக் கொண்டனர்.
நெதர்லாந்து, சுவிஸ் நாடுகளில் இருந்தும் அணிகள் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தன.

நிறைவாக கொடிகள் இறக்கப்பட்டு, நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடலுடனும் தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரக மந்திரத்துடன் நிகழ்வு நிறைவடைந்தது.
(பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – ஊடகப்பிரிவு)