மன்னார்குடி போலீஸ் நிலையத்தில் பெருமாள் சிலை ஒன்று கேட்பாரற்று கிடந்தது. அந்த சிலை எந்த கோவிலுக்கு சொந்தமானது? என்பது பற்றி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தமிழகம் முழுவதும் உள்ள பழமையான கோவில்களில் இருந்து கடத்தப்பட்ட சிலைகளை மீட்பதற்கு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு மூலமாக தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதுதொடர்பாக ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் பல்வேறு இடங்களில் அவ்வப்போது சோதனை நடத்தி வருகிறார்கள்.
சிலை கடத்தலில் 2 தமிழக அமைச்சர்களுக்கு தொடர்பு உள்ளதாக சமீபத்தில் பொன்மாணிக்கவேல் சென்னை ஐகோர்ட்டில் குற்றம் சாட்டினார். இதுதொடர்பான ஆதாரங்களை தாக்கல் செய்யும்படி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
பெருமாள் சிலை
இந்த நிலையில், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள நகர போலீஸ் நிலையத்தில் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டபோது, அங்கு பாலித்தீன் பையில் சுற்றப்பட்ட நிலையில் சிலை ஒன்று கிடந்தது.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார், பாலித்தீன் பையை பிரித்து பார்த்தபோது அந்த சிலை உலோகத்தால் ஆன பெருமாள் சிலை என்பது தெரியவந்தது. பின்னர், 3 அடி உயரமும், 29 கிலோ எடையும் இருந்த அந்த சிலையை மன்னார்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், மன்னார்குடி தாசில்தார் கார்த்தியிடம் ஒப்படைத்தார்.
ஐம்பொன்னா?
இதையடுத்து, போலீஸ் நிலையத்தில் கிடந்த பெருமாள் சிலையை தொல்லியல் துறையினர் ஆய்வு செய்ய உள்ளனர். ஆய்வுக்கு பிறகே சிலை ஐம்பொன்னால் ஆனதா? என்பது தெரிய வரும் என வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து போலீஸ் நிலையத்துக்குள் பெருமாள் சிலையை கொண்டு வந்து வைத்தது யார்? தேவையற்ற பொருட்களுடன் அந்த சிலை கேட்பாரற்று கிடந்தது எப்படி? கடத்தல்காரர்களிடம் இருந்து மீட்கப்பட்டதா? சிலை எந்த கோவிலுக்கு சொந்தமானது? என்பது குறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

