லண்டனில் இடம்பெற்ற “காக்கை” இதழ் அறிமுக நிகழ்வில் ஊடகவியலாளர் இரவி அருணாசலம் ஆற்றிய உரை!

720 0

நிகழ்கால அரசியலும் ஊடகங்களின் செல்நெறியும்

இரவி அருணாசலம்.

வணக்கம் நண்பர்களே,

‘நிகழ்கால அரசியலும் ஊடகங்களின் செல்நெறியும்’ என்பது தலைப்பு. நிகழ்காலம் என்றால் அதன் ஆண்டுக்கணக்கை வரையறை செய்யவேண்டும். நிகழ்காலம் என்பது ஈழத்தில் ஆயுதப்போர் நிகழ்ந்த முப்பது வருடங்களையும் உள்ளடக்குமா அல்லது அதன் பின்னரான காலப்பகுதியா, என்பதே கேள்வி? தமிழ் இலக்கணப்படி ‘இப்போது, இக்கணம்’ என்பதே நிகழ்காலத்துக்கான வரையறை. அவ்வாறு இங்கு நாம் கருத முடியாது. இதனைக் கால வழுவமைதியாகத்தான் அணுக வேண்டும்.

(இங்கு ‘கால வழுவமைதி’க்கான உதாரணம் ஒண்றினைச் சொல்ல வேண்டும்.)

‘நிகழ்காலம்’ என்னும் பதத்தினைச் ‘சமகாலம்’ எனும் பதத்தினூடாகப் பிரதியீடு செய்யின், அது விரிந்த காலத்தினையும் பரந்த தளத்தினையும் எம்முன் வைக்கிறது. அதனூடாகப் பயணம் செய்கிறபோதே நாம் சில இலக்குகளைத் தொடமுடியும். தமிழ், வளம் மிகுந்த மொழி. ஒவ்வொரு சொல்லும் அதனதன் அர்த்தத்தில் முழுமை பெறுகிறது. அதனைப் பயன்படுத்துவோர் பொருத்தமாகக் கையாளாவிடில் அதன் பொருள் சிதைந்துவிடும் அபாயம் உண்டு.

(‘மழை’ என்பதனை உதாரணமாகக் கூறலாம். பெய்கிறது, பொழிகிறது, கொட்டுகிறது, துமிக்கிறது, தூவானம் தெளிக்கிறது, சிணுங்குகிறது..)

அச்சு ஊடகம், ஒலி ஊடகம், காட்சி ஊடகம், இலத்திரனியல் ஊடகம் என செய்தியை, கருத்தைப் பரிமாறும் ஊடகங்கள் நீண்டுகொண்டே செல்வன. இலத்திரனியல் ஊடகம் இப்போது யாவரையும் பற்றிப் பிடித்திருக்கிறது. நமது சட்டைப்பையினுள்ளேயே அதனை வைத்திருக்கிறோம். கைகளில் இருந்தவாறு நம்முடனேயே அது நடை பயில்கிறது. சட்டைப் பையிலிருந்து செய்திகளும் தகவல்களும் நிமிடம் நிமிடமாகக் கொட்டுண்ணுகின்றன. இப்பெரிய உலகை நமது சிறிய கைகளுக்குள் கொண்டுவந்ததில் அதன் பங்கு மெச்சத் தக்கது. அது சாமானியர்களின் ஒரேயோர் ஊடகம்.

ஒன்றை இப்போது சொல்லியாக வேண்டும். நமது அடுத்த அடியை எடுத்து வைப்பதற்கான அத்தனை தைரியத்தையும் இலத்திரனியல் ஊடகமே நமக்கு வழங்குகிறது. நம்மைத் திரள வைக்கின்றது. கை முஷ்டி உயர்த்தி கொட்டு முழக்கிடச் செய்கின்றது. பொதுவெளியில் போலி அரசியல்வாதிகளைக் கேள்வி கேட்க வைக்கின்றது. அடாத்து செய்யும் அரசியல்வாதிகள் மீது தேவையேற்படின் செருப்பால் அடிக்கச் சொல்லவும் அவை தயங்கவில்லை. மேலாக, மக்கள் திரள் போராட்டங்களை நம் நெஞ்சுக்கு நெருக்கமாகக் கொண்டுவர முயல்கின்றன, இலத்திரனியல் ஊடகங்கள்.

ஆயிரமாயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்தாலும் அப்போராட்டக் களங்களில் நாமும் இப்போது ஒருவராக நிற்கின்றோம். கொட்டு முழக்கிட்டுப் போராடும் கூட்டத்தில் எம் குரலும் ஒரு குரலாக எழுகிறது. உண்ணாவிரதப்போராளிகளைக் காண்கையில் நமது வயிறும் வாடுகிறது. ஏனைய போராளிகளின் கை பற்றி எமது உணர்வுகளையும் அவர்கள்பால் கடத்துகிறோம். அவர்களது உணர்வையும் எம்மால் உள்வாங்கிட முடிகிறது. இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம். இலத்திரனியல் ஊடகங்கள் நமக்குத் தந்த கொடை அது.

கடந்த ஜனவரி மாதம் சென்னை மெரீனாக் கடற்கரையில் நிகழ்ந்த ஏறுதழுவுதல் – ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராடடம், இதற்கான ஓர் உச்சக்கட்ட உதாரணம். இலத்திரனியல் ஊடகங்களே இலட்சக்கணக்கான மக்களை அங்கு திரள வைத்தன. அப்போராட்டம் இலட்சியபூர்வமாகவும் கட்டுக் கோப்புடனும் தெளிவான இலக்குடனும் பயணித்தது. போராட்ட இறுதிநாளன்று போலீசார் நிகழ்த்திய வன்முறையையும் இலத்திரனியல் ஊடகங்களே அதிகம் வெளிக்காட்டின. 2015 டிசம்பரில் சென்னையில் நிகழ்ந்த மழை வெள்ளத்தின்போது இலத்திரனியல் ஊடகங்கள் நிகழ்த்திய பங்களிப்பினை மறந்துவிட முடியாது.

இலத்திரனியல் ஊடகங்கள் பற்றி அதிகம் பேசவேண்டிய காரணம் இவையே. இன்றைய தலைப்புக்கு ஏற்ப, அதாவது ‘ஊடகங்களின் அரசியல் செல்நெறி’ எனும் தலைப்புக்கு ஏற்பவே இவை பற்றிக் குறித்தேன். ஒவ்வொரு தனிமனிதரினதும் கையில் இருக்கும் ஒரேயோர் ஊடகம் இலத்திரனியல் ஊடகமே. அது சமூகப் போராளியின் கையிலும் உள்ளது; ஒடுக்குமுறையாளரின் கையிலும் உள்ளது. இன்னும் பலவகையான மனிதர், தம் கைகளிலும் அவற்றை வைத்திருக்கின்றனர். அதனைப் புரிந்து கொண்டால் அதன் அரசியல் செல்நெறியையும் நம்மால் புரிந்துகொள்ள முடியும்.

அதேசமயம், தனிநபர்களாலோ நிறுவனங்களாலோ அரசியந்திரத்தாலோ நிர்வகிக்கப்படும் ஊடகங்கள் பற்றியே அதிகம் உரையாட வேண்டிய தேவை உள்ளது. இவ்வகை ஊடகங்களுக்கு ஓர் அரசியல் உண்டு. அவர்கள் அல்லது அவை தம் அரசியலை, தம் நலன்களை வெளிப்படுத்தும் ஒரு கருவியாகவே ஊடகங்களை முன்னிறுத்துகின்றன. அதில் அவர்கள் தெளிவாகவே செயல்படுகின்றனர். சமகால அரசியல் செல்நெறிகளைத் தமது அரசியல் நலன்களுக்கு ஏற்ப எவ்வாறு வளைத்துக் கொள்ளலாம் என்பதே அவர்களது இலக்கு.

‘நடுநிலைமை’ என்ற சொல்லை அவை உபயோகிக்கக் கூடும். யாவரினதும் கருத்துக்குக் களம் தருகிறோம் எனும் ஜனநாயக முகம் காட்டவும் தவற மாட்டார்கள். மக்களை உணர்ச்சிவசப்படுத்தும் பந்திகளையும் தலைப்புகளையும் அவர்கள் தரத் தவறுவதில்லை. ஆனால் எவற்றைப் பிரசுரிப்பது என்பதில் அவர்கள் தெளிவுகொண்டே உள்ளார்கள். எவற்றை நீக்க வேண்டும் என்பதிலும் தெளிவு உள்ளது. எனவே ஒடுக்கப்பட்டவர்களுக்கான அரசியல் செல்நெறியை இவ்வகை ஊடகங்களில் நாம் எதிர்பார்க்க முடியாது.

‘உண்மைக்குமுன், நீதிக்குமுன் நடுநிலைமை என்று எதுவும் கிடையாது’ என்பதிலிருந்தே சமகால அரசியல் குறித்து ஊடகங்களின் செல்நெறியைக் கவனிக்க வேண்டும். உலகில் வர்க்கங்கள் இரண்டு. தொழிலாளி வர்க்கம் – முதலாளி வர்க்கம் என்பதனைச் சொல்ல வரவில்லை. காலம் அவற்றைக் கடந்து எவ்வளவோ தூரம் போய்விட்டது. அதற்காக அவ்வாறான வர்க்கவேறுபாடு இல்லை என்பது என் கருத்து அல்ல. இவ்வாறான வர்க்க வேறுபாடுகள் வேறும் உள்ளன என்பதையே இங்கு சொல்ல வந்தேன். இன்னொரு கட்டத்துக்கு யாவும் நகர்ந்து விட்டன. தனிநபர் முதலாளித்துவம் என்றில்லாமல் ‘கோப்பிரேட் கொம்பனி’களின் முதலாளித்துவம் என அவை விரிவடைந்து விட்டன. ‘கோப்பிரேட் கொம்பனி’களின் கைகளில் உலகம் திணறுகிறது. அவ்வகையில் சிறுசிறு முதலாளிகள்கூட தொழிலாள வர்க்கத்தினுள் உள்வாங்கப்பட்டு  விட்டனர்.

ஒடுக்குவோர் – ஒடுக்கப்படுவோர் என்கின்ற இரண்டு வர்க்கங்களையே இப்போது உலகு காண்கிறது. சாதி ரீதியாக, மத ரீதியாக, இன ரீதியாக, தேசியம் என்பதன் பெயரில், பெண்ணியத்தின் அடிப்படையில், தேசம் தேசமாக இன்னும் நாம் அறியமுடியாப் பிரிவுகளில் ஒடுக்கப்படுவோர் இவ்வுலகின் பெரும்பகுதியை அடைத்து நிற்கின்றனர். அவர்களை ஒடுக்குவோர் சிறிய பகுதியினரே ஆயினும் பெரும்பலம் கொண்டு இந்த உலகை ஆள்கின்றனர். இங்கெல்லாம் தராசு ஒருபோதும் நேராக நிற்பதில்லை.

சுலபமாக நாம் ஒன்றினை வழிமொழியலாம். அனைத்து ஊடகங்களும் எல்லாவகையான ஒடுக்குமுறைக்கெதிராக, ஒடுக்கப்படுவோர் சார்பாக தம் குரலை உயர்த்த வேண்டும். ஆனால் அது சுலபமேயல்ல. ஊடகங்களின் பெரும்பான்மை எப்போதும் ஒடுக்குமுறையாளர்களின் கைகளிலேயே இருக்கிறது; இரகசியமாகவேனும் இருக்கின்றது. பல சந்தர்ப்பங்களில் ஒடுக்குமுறைக்கெதிராகக் குரல் கொடுத்துக் கொண்டு, அதிமுக்கிய சந்தர்ப்பத்தில் ஒடுக்கும் நிர்வாக யந்திரத்தின் அலகாகவும் செயற்படுகின்றது. அதை நுண்ணியதாகச் செய்து விடுவார். ஜனநாயகத்தின் பெயரால், கருத்துச் சுதந்திரத்தின் பெயரால், மனச்சாட்சியின் குரல் என்னுமாற்போல அவை நமக்குத் தோற்றம் தரும்.

நிறுத்தி, நிதானித்து இக்காலத்தில் நாம் ஒரு முடிவினை எடுத்தாக வேண்டும். உலகில் பெரும்பாலான ஊடகங்கள் ஒடுக்கப்படட மக்களுக்கானவை அல்ல. சமகாலம் என நோக்கும்போது, இது நம் கண்முன் தெளிவாகவே தெரிகிறது. இதனை உதாரணங்கள் மூலம் வெளிப்படுத்தி குறுக்க விரும்பவில்லை. எவ்வகையான ஒடுக்குமுறையாளர்களும் அதனை நுண்ணியதாக வடிவமைப்பர். அதன்வழி சாமானியர்களும் சென்று விடுவார்.

ஒரு திட்டமிட்ட சம்பவத்தைக் கூறிவிட்டு அப்பால் செல்கிறேன். யாழ்ப்பாணம் என்ற சிறிய குடாநாட்டில் ஐந்து தினசரிப் பத்திரிகைகள் வெளியாகின்றன. மாலைத் தினசரி ஒன்று வர இருக்கின்றது. இரண்டு வாரவெளியீடுகள் வருவதனையும் இங்கு குறிப்பிட வேண்டும். ஆனால் மடடக்களப்பில் இருந்து ஒரு தினசரிகூட, அல்லது ஒரு வாரவெளியீடாவது ஏன் வரவில்லை? இக்கேள்வியே தவறு. கொழும்பு தவிர்ந்த இலங்கையின் வேறெந்த நகரிலிருந்தும் ஒரு பத்திரிகைகூட வெளிவருவதில்லை.(தகவல் தவறாயின் திருத்தித் தருக)

காரணம் என்ன? ஒரு காலத்தின் வெளிப்பாடு என்று இதனைக் கூறலாம். முன்னர் ஈழநாடு, ஈழமுரசு, முரசொலி, உதயன் ஆகிய பத்திரிகைகள் வந்திருந்தன. அப்போது ஆயுதப்போர் நிகழ்ந்து கொண்டிருந்ததால் பரபரப்புச் செய்திகளுக்குக் குறைவில்லை. ஆனால் இப்போது தொகையான பத்திரிகைகள் வெளிவர வேண்டிய தேவை எங்கிருந்து உருவாகிறது? யாழ்ப்பாணத்தில் இதுகாலவரை இல்லாது, இப்போது இந்தியத் துணைத் தூதரகம் திறக்கப்பட வேண்டியதன் அவசியம் என்ன? இவை வெறும் கேள்விகள் அல்ல; வெளிப்படையான உண்மை. ஆனால் மறைமுக உண்மைகளும் இங்கு பொதிந்துள்ளன. அரசியல் தெரிவுகளில் மக்கள் எடுக்கும் நிலைப்பாடுகளில் இவ்வகையான அச்சு ஊடகங்களின் பங்கு இல்லையென்றா நம்புகிண்றீர்கள்? மக்களின் மனநிலையை இவ்வகையான ஊடகங்கள் கவனத்தில் எடுக்கவில்லை. அதேசமயம், மக்களின் மனநிலையில் மாற்றத்தினை, மிகுந்த செல்வாக்கினைச் செலுத்தவே இவ்வகையான ஊடகங்கள் முயல்கின்றன. அதில் வெற்றியும் பெற்று விடுகிறார்கள். ‘வெள்ளைக்காரன் பொய் சொல்ல மாட்டான்’ என்பதுபோல ‘பத்திரிகையே சொல்லுது’ எனும் மக்களின் மனோநிலையே இதன் காரணம்.

நாம் உலக ஒழுங்கில் ஒருவராக இருக்கிறோம். உலகில் நிகழும் அத்தனை அரசியல் நிகழ்வுகளும் எம்மை ஏதோ ஒருவிதத்தில் பாதிக்கவே செய்கிறது. அது நமக்கு நிகழவில்லை என்று நாம் ஒதுங்கிப்போக முடியாது. ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறியது என்பது ஈழத்தமிழர்களைப் பாதிக்கவில்லை என்றா நம்புகிறீர்கள்? ‘சமகால அரசியல்’ என்று வரும்போது ஈழத்தை மாத்திரம் குறிவைத்து அரசியல் பேசிவிட முடியாது. உலகில் ஒடுக்கப்படும் அனைத்து மக்களின் அரசியல் குறித்தே பேசிவிட வேண்டும். உலகை ஒட்டுமொத்தமாக ஒடுக்கிவிடத் துடிக்கும் அதிகார வர்க்கத்தின் அரசியல் குறித்தும் பேச வேண்டும்.

சமகால அரசியலில் இலத்திரனியல் ஊடகங்கள் செலுத்திவரும் பங்களிப்பு ஒடுக்கப்பட்ட மக்களுக்குப் பெரும் சாதகமாகவே அமைந்துள்ளது. தமது ‘வியாபார நலன்’ கருதி, சிலசமயங்களில் ஊடகங்கள் சில, ஒடுக்கப்படுவோருக்குச் சாதகமாக நடந்து கொள்வதுமுண்டு. அதை விடுத்து, மானுட நேயம் கொண்டு விளங்கும்  ஊடகவியலாளர்களின் முன்னுள்ள பணி என்ன என்பது பற்றியே இப்போது சிந்திக்க வேண்டியுள்ளது. சிந்திக்கத் தெரிந்த, பகுத்தறிவு மிகுந்த, ஒடுக்கப்படும் மனிதர் மீது அக்கறை கொண்ட ஓர் அரசியலாளர்கள் என்றே அவர்களைக் கருதுகிறேன். அவர்கள் அறம் எனும் விழுமியத்திலிருந்து விலகிப் போக முடியாது.

சுருக்கமாகச் சொல்வதானால், ஒடுக்கப்பட்ட மக்களின் சார்பாகக் குரல் தரவல்ல ஓர் ஊடகம் தேவையென்றால், அது அதிகாரங்களுக்கு ஆட்பட்டிராது, சுதந்திர ஊடகமாகவே செயலாற்ற வேண்டும். அப்போதுதான் சிந்தனைச் சுதந்திரம் கொண்ட ஊடகவியலாளர்கள் உருவாகுவார்கள். சிந்தனைச் சுதந்திரம் மாத்திரமல்ல; ஒடுக்குமுறையாளர்களின் நுண்ணிய, தந்திர அறிவைப் புரிந்து கொள்ளும் ஆற்றலும் ஒடுக்கப்படட மக்களின் மேல் பரிவும் அவற்றை வெளிப்படுத்தக் கூடிய திறனும் கொண்ட ஊடகவியலாளர்களை உருவாக்க முடியும். அதுவே காலத்தின் தேவையும்கூட.

சிந்தனைச் சுதந்திரமும் ஒடுக்கப்பட்ட மக்களின்மீது பரிவும் கொண்ட ஊடகவியலாளனாக என்னை உருவாக்கிய சுதந்திர ஊடக இயக்கங்களான சரிநிகர், ஒருபேப்பர் ஆகிய அச்சு ஊடகங்களுக்கு எனது நன்றியையும் மரியாதையையும் இத்தால் தெரிவித்து விடைபெறுகிறேன் நண்பர்களே.

நன்றி