பிரான்சு பாரிசில் இடம்பெற்ற கறுப்பு யூலை 36 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

630 0

பிரான்சு பாரிசில் கறுப்பு யூலை 23 இன் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல் றிபப்ளிக் பகுதியில் நேற்று (23.07.2019) செவ்வாய்க்கிழமை பிற்பகல் 15.00 மணிக்கு உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது.
பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, தமிழீழ மக்கள் பேரவை, தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பு ஆகியவற்றின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சிறிலங்கா காடையர்களால் 1983 யூலைக் கலவரத்தின்போது கோரமாகப் படுகொலை செய்யப்பட்ட அனைவருக்குமான நினைவுச்சுடரினை தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்புப் பொறுப்பாளர் திரு. பாலக்குமாரன் அவர்கள் ஏற்றிவைத்தார்.
அகவணக்கத்தைத் தொடர்ந்து நினைவுரைகள் இடம்பெற்றன. தமிழீழ மக்கள் பேரவைப் பொறுப்பாளர் திரு.திருச்சோதி அவர்கள் தமிழ் மற்றும் பிரெஞ்சு மொழிகளிலும் பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பரப்புரைப் பொறுப்பாளர் திரு.மேத்தா அவர்களும் கறுப்பு யூலை தொடர்பான விடயங்களைப் பகிர்ந்து கொண்டனர்.

மக்கள் சார்பாக அக்காலத்தில் கண்டதும் கேட்டதும் பற்றித் திருமதி இ. ஈஸ்வரி அவர்களும் திரு.மாணிக்கவாசகர் அவர்களும் உரையாற்றியிருந்தனர்.
தொடர்ந்தும் சனநாயக ரீதியிலான போராட்டங்கள் பிரான்சில் நடைபெறும் என்றும் எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் நீதிக்கான நடைப் பயணம் பிரான்சிலிருந்து ஆரம்பிக்கப்படவுள்ளது என்றும் அதில் இணைந்து அப்போராட்டத்திற்கு வலிமை சேர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

சிறிலங்கா இனவாத அரசின் தமிழின அழிப்புத் தொடர்பான சாட்சியங்களைக் கூறும் புகைப்படங்களும் பதாதைகளும் நிகழ்வில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. வெளிநாட்டு மக்கள் ஆர்வத்துடன் கேட்டுச்சென்றதையும் காணமுடிந்தது. பிரெஞ்சு, ஆங்கில மொழிகளிலான துண்டுப்பிரசுரங்களும் வழங்கப்பட்டன.
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரக மந்திரத்துடன் நிகழ்வு நிறைவுகண்டது.
(பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – ஊடகப்பிரிவு)