அத்திவரதரை தரிசிக்க பக்தர்களுக்கு அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது- முதல்வர் எடப்பாடி பழனிசாமி

251 0

அத்திவரதரை தரிசிக்க பக்தர்களுக்கு அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று கோவை வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

வேலூர் பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது தி.மு.க. நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை வாரி வழங்கி வெற்றி பெற்றனர். இப்போது என்ன வாக்குறுதிகளை அளிக்க முடியும். மத்தியிலும், மாநிலத்திலும் அவர்கள் ஆட்சி இல்லை. வேலூர் எம்.பி. தேர்தல் பிரசாரத்துக்கு பா.ஜனதாவினர் வரவில்லை என்ற தகவல் இதுவரை எங்களுக்கு இல்லை.

கல்வி கொள்கை பற்றி ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்து உள்ளது. தமிழக அரசின் நிலைப்பாடு பற்றி நாங்கள் ஏற்கனவே சொல்லி உள்ளோம்.

அத்திவரதரை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இன்று (நேற்று) மாலை 5 மணியளவில் கூட தலைமை செயலாளர், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர், போலீஸ் டி.ஜி.பி. மற்றும் அந்தந்த துறை செயலாளர்கள் மற்றும் மாவட்ட கலெக்டர் ஆகியோருடன் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. எந்தெந்த முறைகளை கையாண்டால் அத்திவரதரை தரிசிக்க வருகிற பக்தர்களுக்கு வசதி செய்து கொடுப்பது என்பது பற்றிய கருத்துகளை சொன்னார்கள்.

அத்தி வரதர்

 

அந்த கருத்துகளை செயல்படுத்துவதற்கான அனைத்து ஆலோசனைகளையும் மாவட்ட கலெக்டர் மற்றும் சம்பந்தப்பட்ட துறை செயலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி இரவே தலைமை செயலாளர் மற்றும் டி.ஜி.பி. ஆகியோர் ஆலோசனை நடத்தி அனைத்து வசதிகளும் செய்து தருவது குறித்து உத்தரவுகளை பிறப்பித்துள்ளனர். எதிர்பாராத வகையில் மக்கள் கூட்டம் வருகிறது. அதற்கேற்றாற்போன்று முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் வெயில் மற்றும் மழையில் நனையாதவாறு மேற்கூரை, குடிநீர் வசதி, நடமாடும் மருத்துவ குழு, இரு சக்கர வாகன ஆம்புலன்ஸ் வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

இதே போல 3 இடங்களில் பஸ் நிலையம் அமைக்கப்பட்டு அங்கு வந்து இறங்கும் பக்தர்கள் அத்திவரதரை தரிசிப்பதற்கு செல்வதற்காக மினி பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. மேலும் போதுமான போலீசாரும் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்களை பாதுகாப்பதற்கு தான் சட்டம். மக்களை காப்பதற்கு எந்த சட்டம் கொண்டு வந்தாலும் அதை வரவேற்கும்.

டிக்டாக் செயலியை இளைஞர்கள் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது.

இவ்வாறு முதல்-அமைச்சர் கூறினார்.

பின்னர் பி.ஆர்.ஜி. அருண்குமார் எம்.எல்.ஏ.வின் தந்தை இறந்ததையொட்டி அவரது வீட்டுக்கு சென்று துக்கம் விசாரித்தார்.

பின்னர் கார் மூலம் சேலம் புறப்பட்டு சென்றார்.

அப்போது அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சட்டசபை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் வி.சி.ஆறுக்குட்டி, ஓ.கே.சின்னராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.