7 மாத குழந்தையை கொன்ற இந்திய தாய்க்கு 6 வருடம் சிறை

315 0

7 மாத குழந்தையை கொன்ற வழக்கை விசாரித்த லண்டன் கோர்ட்டு இந்திய தாய் ஷாலினாவுக்கு 6 வருடங்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறியது.

இங்கிலாந்தில் லண்டன் நகரில் வசித்துவரும் இந்திய வம்சாவளியினர் ஷாலினா பத்மநாபா (வயது 33). இவர் பல வருடங்களாக தனது கணவருடன் சேர்ந்து கருத்தரித்தல் சிகிச்சை எடுத்துக்கொண்டதன் பலனாக ஷாகன் என்ற பெண் குழந்தையை பெற்றார். ஆனால் அந்த குழந்தை குறை பிரசவத்தில் பிறந்ததாலும், பல்வேறு சிகிச்சைகள் தேவைப்பட்டதாலும் 4 மாதங்கள் வரை ஆஸ்பத்திரியிலேயே இருந்தது. குழந்தை வீடு திரும்பிய பின்னரும் குழாய் மூலம் உணவு செலுத்துதல் போன்ற தனிக்கவனம் செலுத்த வேண்டியிருந்தது.

குழந்தைக்கு 7 மாதம் ஆன நிலையில் திடீரென ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு 2017-ம் ஆண்டு ஆகஸ்டு 15-ந் தேதி அந்த குழந்தை இறந்தது. பிரேத பரிசோதனையில் குழந்தையின் மண்டை ஓட்டில் 2 இடங்களில் எலும்பு முறிவும், கால்களில் எலும்பு முறிவும் இருந்தது தெரிந்தது. போலீஸ் விசாரணையில் முதலில் உண்மையை மறைத்த ஷாலினா பின்னர், தனக்கு மிகவும் வலிமையான குழந்தை தான் வேண்டும் என்றார். இதற்காக அவர் அந்த குழந்தையின் தலையை சுவரில் மோதியும், கால்களை முறித்தும் துன்புறுத்தியதாலேயே அந்த குழந்தை இறந்தது தெரிந்தது. இந்த வழக்கை விசாரித்த லண்டன் கோர்ட்டு ஷாலினாவுக்கு 6 வருடங்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறியது.