அரசுக்கு எதிரான பிரேரணை: கூட்டமைப்பு நடுநிலை வகிக்க வேண்டும் என்கிறார் சிவாஜிலிங்கம்!

50 0

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடுநிலை வகிக்க வேண்டுமென தமிழீழ விடுதலை இயக்கத்தின் யாழ். மாவட்டக் குழு தீர்மானித்துள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

மேலும் அவ்வாறு நடுநிலை வகிக்கும் நிலைப்பாட்டை கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எடுக்காமல் அரசைக் காப்பாற்றும் வகையில் அரசிற்கு ஆதரவாக வாக்களிப்பார்களாயின் மக்கள் மத்தியிலிருந்து கூட்டமைப்பு தூக்கி வீசப்படக்கூடிய ஆபத்து இருப்பதாகவும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.

தமிழீழ விடுதலை இயக்கத்தின் யாழிலுள்ள அலுவலகத்தில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், “மக்கள் விடுதலை முன்னணியினால் அரசிற்கு எதிராக நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை மீது வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.

இந்த சூழ்நிலையிலே தமிழ் மக்கள் உட்பட முழு நாடும் கூட்டமைப்பின் முடிவு என்ன என்பதை அறிவதற்கு ஆவலாக காத்திருக்கின்றது.

அந்த அடிப்படையிலே தமிழீழ விடுதலை இயக்கத்தின் யாழ்ப்பாண மாவட்டக் குழு கூடி நம்பிக்கையில்லாப் பிரேரணை குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 14 பேர் கொண்ட நாடாளுமன்றக் குழு என்ன செய்ய வேண்டுமென விவாதம் நடத்தியது.

இதன்போது, ஒருவர்கூட இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராக வாக்களிக்க வேண்டுமென கூறவில்லை” என தெரிவித்தார்.