சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தது ஏன்?- முக ஸ்டாலின் விளக்கம்

37 0

சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தது ஏன்? என்பது குறித்து மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சட்டசபை வளாகத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு முழு விதி விலக்கு வழங்கவேண்டும் என்று சட்டசபையில் 2 மசோதாக்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டு, 1-2-2017 அன்று அந்த தீர்மானம் இந்த அவையில் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது. அப்படி நிறைவேற்றப்பட்ட அந்த 2 தீர்மானங்களையும், ஜனாதிபதி ஒப்புதலை பெறவேண்டும் என்று மத்திய அரசுக்கு அனுப்பி வைத்திருந்தோம். ஆனால் இதுநாள் வரையில் கிடப்பில் போடப்பட்டிருக்கின்றது என்பது எல்லோருக்கும் நன்றாக தெரியும்.

இதுகுறித்து சட்டமன்றத்தில் இந்த பிரச்சினையை நான் எழுப்பிய நேரத்தில் சட்டத்துறை அமைச்சர் ஒரு தவறான தகவலை, அதாவது நடந்து முடிந்திருக்கக்கூடிய ஒரு உண்மையை முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல மூடி மறைத்திருக்கக்கூடிய கொடுமை நடந்திருக்கின்றது. அதாவது 2 மசோதாக்களை பற்றி கேட்டபோது சட்டத்துறை அமைச்சர் கூறிய விளக்கம்.

ஒப்புதல் வழங்குவதை நிறுத்தி வைத்த ஜனாதிபதி இந்த மசோதாக்களை திருப்பி அனுப்பியிருப்பதாக 22-9-2017 மத்திய அரசின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. எனவே சட்டத்துறை அமைச்சர் முதலில் நிறுத்திவைக்கப்பட்டது என்று தான் கூறினார். இப்போது, நீதிமன்றத்தில் நிராகரிக்கப்பட்டிருக்கின்றது என்று தெரிவித்திருக்கின்றாரே தவிர அது திருப்பி அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றது என்று இந்த அவையில் அவர் சொல்லவில்லை. அதனால்தான் மத்திய அரசின் மூலமாக தமிழக அரசுக்கு வந்திருக்கக்கூடிய கடிதத்தை நான் ஆதாரத்தோடு இந்த அவையில் காண்பித்து பிரச்சினையை எழுப்பினேன். எனவே 21 மாதங்கள் ஆகிவிட்டன. இந்த அரசு 21 மாதங்களாக என்ன செய்துகொண்டிருக்கின்றது? என்பதை இந்த அவையில் வைத்திருக்கவேண்டும்.

இதனை வைத்தால் தான் 6 மாதத்துக்குள் மீண்டும் இதனை வலியுறுத்தி ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி மீண்டும் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க முடியும் என்பதை 201 விதி தெளிவாகச் சொல்லுகின்றது. எனவே அதையும் கோட்டைவிட்டு விட்டார்கள். இப்போதும் இதுகுறித்து நான் கேட்டேன். அதற்கு தெளிவான பதிலை முறையான விளக்கத்தை சட்டத்துறை அமைச்சரும் சொல்லவில்லை. மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரும் பூசி மெழுகுகின்றார். ஏற்கனவே சபையில் நாங்கள் விவாதித்திருக்கக்கூடிய பிரச்சினைகளை எடுத்துப் பேசினார்களே தவிர 2 மசோதாக்களும் திருப்பி அனுப்பிவைக்கப்பட்டதை பற்றி வாய் திறக்கவில்லை. எனவே இதனை கண்டிக்கக்கூடிய வகையில் நாங்கள் தி.மு.க. சார்பில் வெளிநடப்பு செய்திருக்கின்றோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

முக ஸ்டாலின்

இதையடுத்து நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு மு.க.ஸ்டாலின் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- திரும்ப பெறுவதற்கான காரணங்கள் கேட்டிருக்கின்றோம். அதற்கான விளக்கம் இதுவரை தரவில்லை என்று, அமைச்சர் ஒரு விளக்கம் கொடுத்திருக்கின்றார். அதுபற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்:- தற்போது 6 மாதம் ஆகிவிட்டது. இந்த கடிதம் வந்ததற்கு பிறகு உடனே சொல்லியிருக்கவேண்டும். எத்தனையோ முறை சட்டமன்றம் கூடியிருக்கின்றது. அதன் பிறகு அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையிலும் அழுத்தம் கொடுப்போம் என்று சொல்லியிருக்கின்றார்கள். இதே சபையில் பலமுறை அழுத்தம் கொடுப்போம் என்று தான் சொல்லிக்கொண்டிருக்கின்றார்கள். ஆனால் இந்த கடிதம் வந்த விவரத்தை ஏன் மூடிமறைக்கவேண்டும். அதனை செய்யவேண்டிய அவசியம் என்ன? எனவே இந்த நீட் தேர்வை பொறுத்தவரையில் அதில் முழுவிலக்கு வாங்கி தருவதற்கான அக்கறை இல்லை. ஏற்கனவே முதல்-அமைச்சர் சென்று பிரதமரை சந்தித்து சொன்னதாக சொன்னார். அதுவும் பொய் என்பதுதான் என்னுடைய வாதம்.

கேள்வி:- மீண்டும் தீர்மானம் கொண்டு வருவதற்கான வாய்ப்பு இருக்கின்றதா?

பதில்:- விதிமுறைப்படி தீர்மானம் எடுத்துவருவதற்கான வாய்ப்பு இல்லை என்பதுதான் என்னுடைய கருத்து. அதனால் தான் இந்த பிரச்சினையை சட்டசபையில் எழுப்பியிருக்கின்றேன். இவ்வாறு மு.க.ஸ்டாலின் பதில் அளித்தார்.