மாநிலங்களவை தேர்தல்- வேட்பு மனுவை வாபஸ் பெற்றார் என்.ஆர்.இளங்கோ

452 0

மாநிலங்களவை தேர்தலில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் மனு ஏற்கப்பட்டதை தொடர்ந்து தனது வேட்புமனுவை என்.ஆர்.இளங்கோ வாபஸ் பெற்றார்.

தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை இடங்களுக்காக கடந்த 1-ந்தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது.

தி.மு.க. சார்பில் சண்முகம், வில்சன் மற்றும் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ ஆகியோர் கடந்த 6-ந்தேதி வேட்புமனுவை தேர்தல் நடத்தும் அதிகாரியும், சட்டசபை செயலாளருமான சீனிவாசனிடம் தாக்கல் செய்தனர்.

தேச துரோக வழக்கில் வைகோவுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதால் அவரது வேட்பு மனு ஏற்கப்படுமா? என்ற சந்தேகம் நிலவியது. இதைத் தொடர்ந்து தி.மு.க. சார்பில் மூத்த வக்கீல் என்.ஆர்.இளங்கோ கடந்த 8-ந்தேதி மனுதாக்கல் செய்தார்.

வைகோ

வைகோவின் மனு ஏற்கப்பட்டதால் என்.ஆர்.இளங்கோவின் மனு வாபஸ் பெறப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. நேற்று வேட்புமனு பரிசீலனையின் போது வைகோ மனு ஏற்றுக் கொள்ளப்பட்டது.

இதையடுத்து என்.ஆர்.இளங்கோ இன்று தனது மனுவை வாபஸ் பெற்றார்.

அ.தி.மு.க. சார்பில் சந்திரசேகரன், முகமதுஜான் மற்றும் பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் கடந்த 8-ந்தேதி வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.

இவர்களின் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. மொத்தம் 6 பேர் மட்டுமே களத்தில் இருப்பதால் வாக்குப்பதிவு நடைபெறாமலேயே 6 பேரும் எம்.பி.க்களாக தேர்வாக உள்ளனர்.