பழனி கோவில் நவபாஷாண சிலையை கடத்த சதி!

410 0

பழனி முருகன் கோவிலில் உள்ள நவபாஷாணத்தால் ஆன முருகன் சிலையை கடத்த சதி நடந்தது உண்மை என சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தெரிவித்தனர்.

பழனி முருகன் கோவிலில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு போகர் என்ற சித்தரால் வடிவமைக்கப்பட்ட பழமையான நவபாஷாண சிலை உள்ளது. இந்த சிலை வலு இழந்து விட்டதாகவும், புதிய சிலை செய்யவும் முடிவு செய்யப்பட்டது. அதன்படி கடந்த 2004-ம் ஆண்டு 200 கிலோ எடையில் ஐம்பொன் சிலை செய்து பிரதிஷ்டை செய்யப்பட்டது.

இந்த சிலை சில மாதங்களிலேயே உருவம் மாறியதால் அதனை அகற்றி கோவிலில் சிலைகள் மற்றும் ஆபரணங்கள் பாதுகாக்கப்படும் லாக்கரில் வைக்கப்பட்டது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் சிலை கடத்தல் வழக்குகளை விசாரித்த ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் காஞ்சிபுரம் ஏகாம்பர நாதர் கோவிலில் சிலை முறைகேட்டை விசாரித்து வந்தார்.

இந்த வழக்கில் ஸ்தபதி முத்தையாவை கைது செய்து விசாரணை நடத்திய போது பழனி கோவிலுக்கு ஐம்பொன் சிலை செய்ததிலும் முறைகேடு செய்ததை ஒத்துக் கொண்டார். இதனையடுத்து இதை தனி வழக்காக பதிவு செய்து பழனி கோவிலுக்கு ஐம்பொன் சிலை செய்ததில் நடந்த முறைகேடு குறித்து விசாரணை நடத்தப்பட்டது.

பழனியில் சிலை மோசடியை விசாரித்து வரும் பொன் மாணிக்கவேல் தலைமையிலான போலீசார்.

 

இதில் ஸ்பதி முத்தையா, அப்போதைய பழனி கோவில் இணை ஆணையரான உசிலம்பட்டியைச் சேர்ந்த கே.கே.ராஜா, ஆணையர் தனபால், அறநிலையத்துறை இணை ஆணையர்கள் புகழேந்தி, தேவேந்திரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

பழனி கோவிலில் கடந்த 2 நாட்களாக பொன் மாணிக்கவேல், டி.எஸ்.பி. முகேஷ் ஜெயக்குமார், இன்ஸ்பெக்டர்கள் அமுதவள்ளி, தமிழ்செல்வி ஆகியோர் கொண்ட குழுவினர் மீண்டும் விசாரணையை தொடங்கினர். ஐம்பொன் உற்சவர் சிலை தொடர்பான ஆவணங்களை சரிபார்த்த போது நவபாஷாணத்துக்கு அருகே தங்கத்தை வைத்தால் சிறிது காலத்திலேயே கருப்பாக மாறி விடும் எனவும் இதனால்தான் மூலவருக்கு தங்க கவசம் அணிவிப்பது இல்லை எனவும் தெரிய வந்தது.

இதனால் நவபாஷாண சிலையை மறைத்து ஐம்பொன் உற்சவர் சிலையை வைத்ததும் காலப்போக்கில் அதை மூலவராக வைத்து நவ பாஷாண சிலையை கடத்த சதி செய்ததும் உறுதி செய்யப்பட்டது. இது குறித்து டி.எஸ்.பி. முகேஷ்ஜெயக்குமார் கூறுகையில், நவபாஷாண சிலையை கடத்த சதி திட்டம் தீட்டப்பட்டதால் கடந்த 2 நாட்களாக விசாரணை நடத்தி வந்தோம். தற்போது அது உண்மைதான் என தெரிய வந்துள்ளது. ஸ்தபதி முத்தையாவே இந்த திட்டத்தை தீட்டி உள்ளார். அவரை இயக்கியவர்கள் யார்? என விசாரணை நடத்தி வருகிறோம் என்றார்.

இது குறித்து பொன் மாணிக்கவேல் கூறுகையில், நவபாஷாணம் என்பது தீராத நோய்களை தீர்க்கும் சக்தி கொண்டது. பழனி முருகன் சிலைக்கு அபிஷேகம் செய்யப்பட்ட நீர், பாலை குடித்தால் நோய்கள் தீரும் என்பது நம்பிக்கை. இதனால் முருகன் சிலையில் முதுகு பகுதியில் இருந்து நவபாஷாணத்தை சுரண்டி விற்று விட்டதாக பல ஆண்டுகளுக்கு முன்பே சர்ச்சை எழுந்தது. தற்போது சிலையை மாற்றி விட்டு கடத்த சதி நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிலையை கடத்த சதி செய்த யாரும் தப்ப முடியாது. விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள். 2 நாட்கள் கழித்து மீண்டும் பழனிக்கு வந்து விசாரணை நடத்த உள்ளேன் என்றார்.