யேர்மனி மத்திய மாநிலத்தின் மாகாணசபை உறுப்பினர்களுடன் ஈழத்தமிழ் பிரதிநிதிகள் சந்திப்பு

693 0

தமிழின அழிப்புக்கு நீதி கோரும் முகமாக யேர்மனியில் மத்தியமாநில மாகாணசபை உறுப்பினர்களுடன் ஈழத்தமிழ் பிரதிநிதிகள் சென்ற வாரம் சந்தித்து தாயகத்தில் நிலவும் அரசியல் சூழ்நிலையை எடுத்துரைத்தனர். இச் சந்திப்பில் சமூக ஜனநாயகக் கட்சி(SPD) யை சார்ந்த இரு மாகாணசபை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

குறிப்பாக முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு 10 வருடங்கள் கடந்தும் இன்றுவரை எந்தவிதமான பரிகார நீதியும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு கிடைக்கவில்லை என்றும் அத்தோடு இன்றும் தொடர்ந்த வண்ணம் உள்ள காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டங்களையும் கருத்தில் எடுத்து, மற்றும் தமிழ் அரசியல் கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என்றும் தமிழ் பிரதிநிதிகளால் எடுத்துரைக்கப்பட்டது.

மேற்குறிப்பிட்ட கருத்துக்களை கரிசனையுடன் உள்வாங்கிய மாகாணசபை உறுப்பினர்கள் தமிழ் மக்களின் நீதிக்காக தாம் எதிர்காலத்தில் குரல்கொடுப்பதாக உறுதியளித்ததோடு மற்றும் யேர்மனியில் வாழும் தமிழ் மக்களின் சமூக நலன் சார்ந்த இணைவாக்கம் தொடர்பாகவும் அறிவதற்கு ஆர்வம் கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.