ஹபிஸ் சயீது உள்பட 13 பேர் மீது வழக்கு பதிவு : பாகிஸ்தான் நடவடிக்கை

345 0

பாகிஸ்தான் தனது சொந்த மண்ணில் பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி திரட்டப்படுவதை தடுக்க போதிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் கவலை தெரிவித்து வந்தன.

உலகநாடுகளின் அழுத்தம் காரணமாக, மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஜமாத் உத் தவா பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஹபிஸ் சயீது மற்றும் அவரது நெருங்கிய கூட்டாளிகள் 12 பேர் மீது, பயங்கரவாதத்துக்கு நிதி திரட்டுதல் பிரிவில் 23 வழக்குகளை பதிவு செய்து பாகிஸ்தான் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இது குறித்து பாகிஸ்தான் பயங்கரவாத தடுப்பு அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:–

ஜமாத் உத் தவா, லஷ்கர் இ தொய்பா, பல்லாஹ் இ இன்சானியத் அமைப்பு ஆகியவை சேர்ந்து குஜ்ரன்வாலா, மூல்தான், லாகூர் ஆகிய பகுதிகளில் இருந்து பயங்கரவாத செயல்களுக்கு நிதி திரட்டியது தெரியவந்தது. இது தொடர்பாக ஹபிஸ் சயீது உள்பட 13 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இந்த அமைப்பினர் நேரடியாக நிதி திரட்டாமல் பல்வேறு அறக்கட்டளைகள் வழியாக நிதி வசூலித்து இருக்கிறார்கள். இந்த அமைப்பினர் வசூலித்த பணம், சேர்த்து வைத்துள்ள சொத்துகள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.