தமிழர்களை ஏமாற்றும் அரசியலை த.தே.கூ. செய்கின்றது – வரதராஜ பெருமாள்

427 0

தமிழ்மக்களை ஏமாற்றுகின்ற  அரசியலை  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் செய்து வருகின்றனர் என வரதராஜபெருமாள் தெரிவித்துள்ளார்.

கடந்த 5 வருடங்களாக  ரணில் விக்கிரமசிங்கவினுடைய ஆட்சியினை பாதுகாத்து, பராமரித்து அவர்களுடன் அன்னியொன்னியமாக உறவாடி வந்தது மாத்திரமல்லாமல், அரசியல் தீர்வு விடயத்தில் ரணில் விக்கிரமசிங்க பற்றிய முழு நம்பிக்கையினையும் தமிழ் மக்களுக்கு ஏற்படுத்தியவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரே.

ஆனால் இப்பொழுது இறுதியாக தேர்தல் வரப்போகின்றது என்ற ஒரு நிலைமை வந்தவுடன், தங்களுக்கும் இந்த ஆட்சிக்கும் சம்பந்தம் இல்லாத மாதிரியும், தாங்கள் ஏதோ தூரத்திலே இருந்து எதிர்பார்த்து ஏமாற்றப்பட்டவர்கள் போல நாடகமாடுவது, தமிழ் மக்களை ஏமாற்றும் கூட்டமைப்பினரின் மிக மோசமான அரசியலாகும். இவ்வாறு தெரிவித்தார் முன்னாள் முதலைமைச்சரும், ஈ.பி.ஆர்.எல்.எவ். (வரதர் அணி) தலைவருமான வரதராஜபெருமாள்.

இது தொடர்பில் மேலும் அவர் தெரிவித்ததாவது,

வரவிருக்கின்ற ஜனாதிபதி தேர்தலோடு, இந்த நாட்டில் மிகப் பெரியதொரு அரசியல் மாற்றம் நிகழ்வதற்கான நி‍லைமைகள் உள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முதலில் ஆட்சி ஏற்பட்டபொழுது பெரும் நம்பிக்கைகள் தமிழ் மக்களுக்கு சிங்களத் தலைவர்களாலும், தமிழ் தலைவர்காளலும் கொடுக்கப்பட்டது.

ஆனால் இன்றைக்கு இருக்கக்கூடிய நிலைமையில், சிங்களத் தலைவர்கள் தமிழ் மக்களை ஏமாற்றினார்கள் என்பது அவர்கள் முன்னரும் நீண்டகாலமாக ஏமாற்றியவர்கள் இப்பொழுதும் ஏமாற்றியிருக்கின்றார்கள். ஆனால் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் இருந்து ஒவ்வொரு ஆண்டும் இந்தா அரசியல் தீர்வு வருகின்றது, காணாமல் போனவர்களுக்கு நீதி கிடைக்கின்றது , அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட போகின்றார்கள் என்றெல்லாம் சொல்லிவந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இன்றைக்கு தமிழ் மக்களை ஏமாற்றியிருக்கின்றார்கள் என்பது திட்டவட்டமான வெளிப்படையான உண்மை.

மேலும்  சாதாரணமாக அரசியல் தெரிந்த அவனைருக்கும் தெரியும் ரணில் விக்கிரமசிங்கவினுடைய அரசாங்கம் எதையுமே தமிழ் மக்களுக்குத் தரப்போவதில்லை. ஆனால், புதிய அரசியல் யாப்பு ஒன்றினை மிகப் பெரிய அதிகாரங்களைக் கொண்டதாக,  ஒற்றையாட்சியாக இருந்தாலும், சமஸ்டி அளவிற்கு அதிகாரங்களைக் கொண்டதாக ஒரு அரசியல் தீர்வு இந்தா வருகின்றது என்று வாக்குறுதி அளித்தவர்கள், உத்தரவாதம் வழங்கியவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் த‍லைவர் சம்பந்தனும்,  அவர்களுடைய துணைத் தலைவர்களும் தான்.

இந்நி‍லையில், சிங்களத் தலைவர்களைவிட, தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு தொடர்பாகவும், ஏனைய அரசியல் பிரச்சினை தொடர்பாகவும் வாக்குறுதி அளித்த தமிழ்த் தலைவர்கள், இந்த ஆட்சிக்கு துணைகொடுத்து , இன்றைக்கு ஏதோ ஒன்றும் தெரியாத சின்னப் பிள்ளைகள் போல, அரசியல் புரியாமல் இருந்தவர்கள் போல காட்டிக்கொள்கிறார்கள். ஆனால், இப்பொழுதும் இன்றைக்கும்  ரணிலின் ஆட்சி அதிகாரத்தில் இருக்கின்றது என்றால், அது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினுடைய ஆதரவிலேதான் .

இந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடந்த 5 வருடங்களாக ரணிவில் விக்கிரமசிங்கவினுடைய ஆட்சியினை பாதுகாத்து, பராமரித்து அவருடன் அன்னியொன்னியமாக உறவாடி வந்தது அனைவருக்கும் தெரிந்த ஒரு விடயம். ரணில் விக்கிரம சிங்க பற்றிய முழு நம்பிக்கையினையும் தமிழ் மக்களுக்கு ஏற்படுத்தியதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே. இப்பொழுது இறுதியாக தேர்தல் வரப்போகின்றது என்ற ஒரு நிலைமை வந்தவுடன், தங்களுக்கும் இந்த ஆட்சிக்கும் சம்பந்தம் இல்லாத மாதிரி தங்கள் ஏதோ தூரத்திலே இருந்து எதிர்பார்த்து ஏமாற்றப்பட்டவர்கள் போல நாடகமாடுவது மிக மோசமான அரசியலாகும்.

இந்த நி‍லைமையில், தமிழ் மக்கள் இப்பொழுதாவது ஒன்றினை புரிந்து கொள்ள வேண்டும். இந்த ஏமாற்றுத் தனமானவர்களை தங்களுடைய பிரதிநிதிகளாக மீண்டும் தெரிவு செய்தால், மீண்டும் 5 வருடங்களுக்கு ஏமாற்றப்படுவார்கள்.

இன்றைக்கு எத்தனையோ ஐந்து வருடங்கள் தமிழ் மக்கள் ஏமாற்றப்பட்டு விட்டார்கள். ஆகையினால் தமிழ் மக்கள் மத்தியில் உண்மைகளை பேசி நேர்மையான முறையில் யாதார்த்தமான  முறையில் தமிழ் மக்களுக்கான விடயங்களை குறைந்த பட்ச அளவிலாவது சாதிக்கக் கூடியவர்களை தமிழ் மக்கள் தெரிவு செய்கின்ற ஒரு அரசியல் வரலாறு ஆரம்பிக்கப்பட வேண்டிய ஒரு தேவையும், சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது என்றார்