அரசு பள்ளி மாணவர்களுக்கு சத்துணவுடன் பால்-பழங்கள்: தமிழக அரசு பரிசீலனை

346 0

தமிழ்நாட்டில் அரசு பள்ளி மாணவர்களுக்கு சத்துணவுடன் பால் மற்றும் பழங்கள் வழங்குவது குறித்து அரசு பரிசீலனை செய்து வருகிறது.தமிழ்நாட்டில் அரசு பள்ளி மாணவர்களுக்கு சத்துணவுடன் முட்டையும் வழங்கப்படுகிறது.

இதுபோதாது என்றும் பால், பழங்கள் வழங்க வேண்டும் என்றும் அரசுக்கு கோரிக்கைகள் வந்த வண்ணம் உள்ளன.

தமிழ்நாட்டில் ஆவின் பால் உற்பத்தி அதிகரித்துள்ளதால் சத்துணவு மையங்களுக்கு தேவையான பால் சப்ளை செய்ய முடியும் என்றும் கருத்து தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து ஆவின் நிர்வாகம் தீவிர ஆலோசனை நடத்தியது. அப்போது பள்ளி மாணவர்களுக்கு பால் பாக்கெட் வழங்கும்போது பால் கெட்டு போனால் என்ன செய்வது என்றும் விரிவாக ஆலோசித்தனர்.

பால் பாக்கெட் வழங்குவதற்கு பதில் பால் பவுடர்களை சத்துணவு மையங்களுக்கு வழங்கினால் மாணவர்களுக்கு உடனுக்குடன் கலக்கி கொடுக்கலாம். அதில் எந்த பிரச்சனையும் வராது என்று கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முடிவு அரசின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதேபோல் சத்துணவுடன் வாழைப்பழம், பலாப்பழம், ஆப்பிள் பழங்களும் வழங்கலாம் என்று கருத்துரு தயாரிக்கப்பட்டு வருகிறது.
கோப்புப்படம்

மாணவர்களுக்கு பழங்கள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டால் விவசாயிகள் வாழ்வும் வளம் பெறும், மாணவர்களுக்கும் சத்துள்ள உணவு கிடைக்கும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

பால்-பழங்கள் சத்துணவில் வழங்கினால் அதற்கு எவ்வளவு நிதி ஒதுக்க வேண்டும் என்று நிதி துறையிடம் கருத்துரு கேட்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அரசு உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், சத்துணவுடன் பால், பழங்கள் வழங்கும் முடிவு அரசின் பரிசீலனையில் இருப்பதாகவும் இதை செயல்படுத்துவதற்கான சாத்திய கூறுகள் பற்றி நிபுணர்களிடம் கருத்து கேட்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.