நோர்வே வாழ் ஈழத்தமிழர்களின் நிதி உதவியில் முன்னாள் போராளிகளுக்கு க.வி.விக்னேஸ்வரன் வாழ்வாதார உதவிகள் வழங்கி வைப்பு!

422 0

நோர்வே மேற்கு பகுதியான சுன்மோர வாழ் ஈழத்தமிழர்களின் நிதி உதவியில் தமிழ் மக்கள் கூட்டணியால் கிளிநொச்சி மாவட்ட மாற்றுவலுவுடையோர் சங்கத்தின் அனுசரணையுடன் முன்னாள் போராளிகள் நால்வருக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

தமிழினத்தின் விடிவிற்கான போராட்டத்தில் ஈடுபட்டு தமது அவயங்களை இழந்து நிற்கும் முன்னாள் போராளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் தொழில் முயற்சிகளுக்கான உதவிகள் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் க.வி.விக்னேஸ்வரன் அவர்களால் கையளிக்கப்பப்பட்டிருந்தது.

கிளிநொச்சியில் அமைந்திருக்கும் மாற்றுவலுவுடையோர் சங்கத்தின் அலுவலகத்தில் இன்று புதன் கிழமை காலை 10.00 மணியளவில் நடைபெற்றிருந்த இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டிருந்த முன்னாள் நீதியரசரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான க.வி.விக்னேஸ்வரன் அவர்களுக்கு கி.மா.மாற்றுவலுவுடையோர் சங்கத்தின் தலைவர் திரு சரவணன் அவர்கள் மாலை அணிவித்து வரவேற்றிருந்தார். தொடர்ந்து பிரதம விருந்தினர் மங்கல விளக்கினை ஏற்றிவைத்து நிகழ்வை தொடக்கி வைத்திருந்தார்.

கிளிநொச்சி மாவட்ட மாற்றுவலுவுடையோர் சங்க செயலாளர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் தமிழ் மக்கள் கூட்டணியின் மத்திய குழு உறுப்பினர் இரா.மயூதரன் அவர்கள் உரையாற்றியதையடுத்து பிரதம விருந்தினர் உரை இடம்பெற்றிருந்தது. அதனையடுத்து தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் அவர்களால் பயனாளிகளுக்கு இரண்டரை இலட்சம் பெறுமதியான உதவிப் பொருட்களை கையளிக்கப்பட்டிருந்தது.

இந்நிகழ்வில் தமிழ் மக்கள் கூட்டணியின் கிளிநொச்சி மாவட்ட அமைபாளர் திரு அன்ரனி கெப்ரியல், மகளிரணி உப செயலாளர் திருமதி இளவேந்தி, நிர்வாக இணை உப செயலாளர் திரு ஆலாலசுந்தரம், ஊடகமும் செயற்திட்ட ஆக்கத்திற்கான உப செயலாளர் திரு சிற்பரன், இளைஞர் அணி இணைப்பாளர் திரு கிருஸ்ணமேனன், வவுனியா மாவட்ட அமைப்பாளர் திரு சிறிதரன் மற்றும் மத்திய குழு உறுப்பினர் இரா.மயூதரன் ஆகியோர் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.