நைஜீரியாவில் கடத்தப்பட்ட இந்திய மாலுமிகள் 5 பேர் மீட்பு- மத்திய மந்திரி தகவல்

371 0

நைஜீரியாவில் கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட இந்திய மாலுமிகள் 5 பேர் பத்திரமாக விடுவிக்கப்பட்டதாக மத்திய மந்திரி தெரிவித்துள்ளார்.

நைஜீரியாவின் போனி தீவு அருகே கடந்த ஏப்ரல் மாதம் 19ம் தேதி ‘எம்டி அபகஸ்’ என்ற கப்பலை கடற்கொள்ளையர்கள் கடத்தினர். அதில் இருந்த 5 இந்திய மாலுமிகளை கரைக்கு அழைத்துச் சென்று சிறைவைத்தனர். அவர்களை மீட்கும் நடவடிக்கையில் இந்திய கப்பல் துறை அமைச்சகம் இறங்கியது.

நைஜீரியாவில் உள்ள இந்திய தூதரகத்துடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட முயற்சி காரணமாக, 5 மாலுமிகளும் கடந்த 27-ம் தேதி விடுவிக்கப்பட்டனர். அவர்களை இந்தியாவிற்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
கப்பல்துறை இணை மந்திரி மன்சுக் எல். மாண்டவியா

இதுபற்றி கப்பல்துறை இணை மந்திரி மன்சுக் எல். மாண்டவியா அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “கப்பல்துறை, கப்பல்துறை தலைமை இயக்குனர் மற்றும் அபுஜாவில் உள்ள இந்திய தூதரகம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இணைந்து மேற்கொண்ட முயற்சியினால், 5 இந்திய மாலுமிகளும் விடுவிக்கப்பட்டு, இந்திய அதிகாரிகளின் பாதுகாப்பில் பத்திரமாக உள்ளனர்” என குறிப்பிட்டுள்ளார்.