சுவாதியின் இறுதி ஆசை நிறைவேறாமல் போய்விட்டது

480 0

201606291132453045_Swathi-last-wish-was-unfulfilled-the-father-tears_SECVPFசுவாதியின் இறுதி ஆசை நிறைவேறாமல் போய்விட்டது என்று தந்தை கோபாலகிருஷ்ணன் பேட்டி அளித்துள்ளார்.  சுவாதியின் குடும்பத்தினர் இன்னமும் அதிர்ச்சியில் இருந்தும், துயரத்தில் இருந்தும் மீள முடியாத நிலையில் உள்ளனர்.

சுவாதியின் தந்தை சந்தானகோபால கிருஷ்ணனுக்கு யாராலும் ஆறுதல் சொல்லி தேற்ற முடியவில்லை. மகள் கொடூரமாக கொல்லப்பட்டதை அவரால் தாங்கிக்கொள்ளவே இயலவில்லை.

கண்ணீர் மல்க காணப்படும் அவர் சுவாதி பற்றி சில தகவல்களை கனத்த இதயத்துடன் தெரிவித்தார். அவர் கூறியதாவது:–

என்மகள் சுவாதி மிக, மிக இரக்கக்குணம் கொண்டவள். சிறு எறும்புக்கு கூட அவள் தீங்கிழைத்தது இல்லை. அவளது மனிதாபிமானம் வியக்க வைக்கும். என் மகள் என்பதற்காக நான் இதைச் சொல்லவில்லை.

தெருவில் யாராவது சிறு குழந்தைகள் பிச்சை எடுப்பதை பார்த்தால் அவள் மனம் வாடிப்போவாள். அது போல சாப்பாட்டுக்கு தவிக்கும் ஏழைகளை கண்டால் மனம் உருகுவாள். இரவு இவர்கள் சாப்பிடாமல் தானே தூங்குவார்கள் என்று கேட்பாள்.

எப்போதும் ஏழைகள் படும் கஷ்டம் பற்றியே பேசுவாள்.அவள் ஆத்மா தூய்மையானது. அப்படிப் பட்ட பெண்ணுக்கு நேர்ந்த முடிவை, அதுவும் கொடூர முடிவை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை.

சுவாதி தான் இறந்த பிறகு தனது உடல் உறுப்புகளை தானம் செய்ய வேண்டும் என்று முடிவு செய்திருந்தாள். இது பற்றி கூட அவள் என்னிடம் ஒரு தடவை பேசி இருக்கிறாள்.

ஆனால் அவளது கடைசி ஆசையை என்னால் நிறைவேற்ற முடியாமல் போய்விட்டது. நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தின் பிளாட்பாரத்தில் அவள் உடல் 2 மணி நேரமாக கிடக்க நேரிட்டதால் அவளது கடைசி ஆசையை என்னால் நிறைவேற்ற இயலவில்லை.

சுவாதி உடலை அன்று மாலைதான் எங்களிடம் ஒப்படைத்தனர். எனவே எங்களால் எதுவும் செய்ய முடியாமல் போய்விட்டது.

நாங்கள் என்ன தவறு செய்தோம்? என் மகள் சுவாதி என்ன தவறு செய்தாள்? அவள் கடவுள் பக்தி நிறைந்தவள். அவள் வீட்டில் இருந்து புறப்பட்டு வேலை செய்யும் நிறுவனத்துக்கு சென்று சேரும் வரை காயத்ரி மந்திரம் சொன்னபடி செல்வாள். யாரிடமும் அவர் விரோதமாக நடந்து கொண்டதே இல்லை. ஆனால் இப்போது அவள் கொலை பற்றி பத்திரிகைகளிலும், சமூக வலைத்தளங்களிலும் பல விதமான கருத்துக்களை வெளியிடுகிறார்கள். ஏன் சமுதாயத்தில்இப்படி நடந்து கொள்கிறார்கள் என்று எங்களால் புரிந்து கொள்ளமுடியவில்லை.

என்மகள் மரணம் பற்றிய சர்ச்சையை இனி நீடிக்க விட வேண்டாம் என்று அனைவரிடமும் கேட்டுக்கொள்கிறேன். குறிப்பாக சமூக வலைத் தளங்களில் தேவை இல்லாத கருத்துகளை தெரிவிப்பதை கைவிடும்படி வேண்டுகிறேன்.

சுவாதி என்னிடம் எதையும் மறைக்க மாட்டாள். சந்தேகப்படும்படி அவளை ஒருவர் பின் தொடர்ந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால் சுவாதி அப்படி எந்த தகவலையும் என்னிடம் சொல்லவில்லை. அவளை பற்றி வரும் அத்தகைய தகவல்கள் தவறானவை. எந்த ஒரு வாலிபரும் அவளை பின்தொடரவில்லை. அத்தகைய தொந்தரவு இருந்திருந்தால் நிச்சயம் அவள் என்னிடம் சொல்லி இருப்பாள்.

தினமும் இரவு 7.30 மணிக்கு வீட்டுக்கு வந்து விடுவாள் எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பாள். அந்த சிரித்த முகத்தை இனி நான் பார்க்கவே முடியாது. இவ்வாறு சுவாதியின் தந்தை சந்தான கோபாலகிருஷ்ணன் கண்ணீர் மல்க கூறினார்.

Leave a comment