ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் ஜோயர்ன் சோரென்சென் (Mr.Joern Soerensen) வடக்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனை இன்று (20) முற்பகல் ஆளுநர் செயலகத்தில் சந்தித்தார்.

இந்த சந்திப்பின்போது ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தினால் வடமாகாணத்தில் முன்னெடுக்கப்படும் செயற்திட்டங்கள் தொடர்பில் ஆளுநருக்கு விபரிக்கப்பட்டது.

போரினால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட மாகாணமாக வடமாகாணம் காணப்படுவதால் இங்கு வாழும் மக்களின் வாழ்க்கைத்தரத்தினை பொருளாதார ரீதியாக உயர்த்தக்கூடிய திட்டங்களை செயற்படுத்துமாறு கோரிக்கை விடுத்தார்.

இதேவேளை, வடமாகாண மக்கள் எதிர்கொண்டுவரும் நீர்ப்பிரச்சனையை தீர்வுக்கு கொண்டுவருவதற்கு முன்னெடுக்கும் வடமராச்சிக்களப்பு திட்டம் உள்ளிட்ட செயற்திட்டங்கள் தொடர்பில் குறிப்பிட்ட ஆளுநர் இதற்கு உதவிபுரியுமாறும் கோரிக்கை விடுத்தார்.

மேலும், இந்தியாவில் வாழ்ந்துவரும் இலங்கை அகதிகள் தொடர்பில் குறிப்பிட்ட  ஆளுநர், குறித்த அகதிகளை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வருவதற்கு ஐ.நா உதவி புரியவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.