அமெரிக்காவில் விருந்து நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் உயிரிழப்பு!

68 0

அமெரிக்காவில் விருந்து நிகழ்ச்சியில் மர்ம நபர் சுட்டதில் 8 பேரின் உடல்களை துப்பாக்கி குண்டுகள் துளைத்தன. அதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணம் பிலிடெல்பியா நகரில், பட்டம் பெற்ற மாணவர்களுக்கான விருந்து நிகழ்ச்சி நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. இதில் மாணவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த அனைவரும் ஆடல், பாடல் என மகிழ்ச்சியில் திளைத்திருந்தனர். அப்போது, மர்ம நபர் திடீரென அங்கிருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். இதனால் அங்கு பெரும் பதற்றமும், பீதியும் தொற்றிக்கொண்டது. உயிரை காப்பாற்றிக்கொள்ள அனைவரும் நாலாபுறமும் சிதறி ஓடினர். ஆனாலும் மர்ம நபர் சுட்டதில் 8 பேரின் உடல்களை துப்பாக்கி குண்டுகள் துளைத்தன. அதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். மற்ற 7 பேரும் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் யார்? தாக்குதலுக்கான பின்னணி என்ன? என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.